சக்கரம் சுழலுதடி

ததும்பும் உன் இளமை - என்னை
தத்தளிக்க வைக்குதடி
பதுங்கும் என் உணர்வுகள் - அணை
உடைத்த வெள்ளமாகுதடி
ஒதுங்கும் பல நினைவுகள் - என்
நெஞ்சில் பாரமாகுதடி.

ரவிவர்மன் வரைந்திட்ட ஓவியமோ - நீ
கவிகம்பன் படைத்திட்ட காவியமோ
புவிகாணா அழகதனின் அதிசயமோ - நீ
குவிக்கப்பட்ட குபேரனின் பொக்கிஷமோ

பருவத்தில் பூத்திருக்கும் மலரே - உன்
உருவத்தில் உன்மத்தம் ஆனேனடி
தெருவினில் நீயிறங்கி நடந்திட்டால் - உன்
கருவத்தில் மொய்த்திடுமே ஊரார்கண்கள்

தடாகத்தில் பூத்திருக்கும் தாமரையே - உன்னை
விடாமல் நான் தாங்கிடுவேன் வான்மதியே
தொடாமல் இருக்கும்வரை இரும்பாய்தான்
தொட்டுவிட்டாலோ இனித்திடுவாய் கரும்பாய்தான்.

கைகோர்த்து வாழும்வரை நீயும்நானும்
நெடும்பயணம் போகவேண்டும் அன்பே..அன்பே..
தடங்கல்கள் வழியெங்கும் இருக்குமடி பெண்ணே
தாண்டியே நாம் போகவேண்டுமடி எந்தன் கண்ணே

உன்னை நான் மறப்பது இனி முடியுமா? - கண்ணே
உன்னில் நான் தொலைந்துவிட்டேன் உனக்கு தெரியுமா?
உன்னைச் சுற்றி தொலைத்ததை தேடித்தேடியே
என்வாழ்க்கைச் சக்கரம்தான் சுழலுதடி பெண்ணே

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (14-Oct-22, 6:45 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 86

மேலே