குறளன் நெடியோனாதல் - கலி விருத்தம்

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

கயம்தரு நறும்புனல் கையில் தீண்டலும்
பயந்தவர் களுமிகழ் குறளன் பார்த்தெதிர்
வியந்தவர் வெருக்கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்(கு) உதவிய உதவி ஒப்பவே! 35

- வேள்விப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்

இப்பாட்டில் உள்ள மோனை வகைகள்:

’க’யம்தரு நறும்புனல் ’கை’யில் தீண்டலும் - (1, 3 சீரில்) பொழிப்பு மோனை

’ப’யந்தவர் களுமிகழ் குறளன் ’பா’ர்த்தெதிர் - (1, 4 சீரில்) ஒரூஉ மோனை

’வி’யந்தவர் ’வெ’ருக்கொள. ’வி’சும்பின் ஓங்கினான் - (1, 2, 3 சீரில்) கூழை மோனை

’உ’யர்ந்தவர்க்(கு) ’உ’தவிய ’உ’தவி ’ஒ’ப்பவே - (1, 2, 3, 4 சீரில்) முற்று மோனை - உ விற்கு உ ஊ ஒ ஓ மோனை

பொருளுரை:

குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர் தனது கைகளில் தீண்டபப்பட்டவுடனே பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமன மூர்த்தி எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும் அஞ்சும்படியாக அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்!

கயம்: குளம். நறும்புனல்: தெளிந்து குளிர்ந்துள்ள நீராம். உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்ற குறட் கருத்துத் தோன்ற, உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல. வாமன மூர்த்தி வானுற ஓங்கி வளர்ந்து நின்றான் என்பது கருத்து! பயந்தவர்: பெற்றோர் (தாய். தந்தையர்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Oct-22, 11:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே