கண்களின் வழியே

*கண்களின் வழியே*

யாருக்காகவோ
ஏங்குகிறாள்?
அது தான் இன்னும்
உயிர் போகவில்லை.

சுற்றியிருந்த
உறவுகளின் பேச்சை
அம்மா கேட்டிருப்பாளா?

உழைத்து ஓய்ந்த
தேகம்
மூச்சு மட்டும் சீராக
கண் மூடிக் கிடந்தாள்.

கடைசி ஆசை என்ன?
என்று கேளுங்கள்
உறவுகளுக்கு
அவசரம்.

மெல்லக் காதருகே
சென்று கேட்டேன்.

என்னம்மா உன் ஆசை?

விரிந்த இதழ்களிடையே
சிறு புன்னகை

ஒரு சில மணித்துளியேனும்
எனக்காக நான்
வாழ ஆசைப்பட்டேன்..

சொற்கள் உதிரும் போதே
அவள் கண்களைத்
திறந்தாள்..

திறந்த கண்கள்
அப்படியே நிலைக்க

அவள் கண்களின் வழியே
உயிர் போயிற்றாம்

சுற்றங்கள் கூறினர்

அம்மா பயணித்தாள்
என் கண்ணீரைச் சுமந்து.

- கமலநாதன்

எழுதியவர் : கமலநாதன் (7-Nov-22, 2:48 pm)
சேர்த்தது : Kamalanathan S
Tanglish : kangalin valiye
பார்வை : 223

மேலே