அவதிகள்

பியரோ, பிரியாணியோ...
அளவு மீறுகையில்
வெவ்வெறு வாசல்களில்
வெளியேறும் அவதிகள்
அச்சிலேற்ற முடியாதவை!

சொந்தக் காசில்
சூனியம் வைத்துக்கொண்ட
ஞானத்தின் பிறப்பிடம்
பொதுவாக
பார் ஆக இருக்கிறது பலருக்கு;

சங்கமங்களில் புலம்பும்
சங்கடங்கள்
பொருட்படுத்துவதேயில்லை
சூழ்ந்திருக்கும் செவிகளில்
ததும்பும் செந்நிற அவதியை!.

அந்திம வயதில்
அடுத்தடுத்து வரும்
உடல் அவதிகளால்
ஓய்ச்சலின்றி
மருத்துவர்கள் காட்டில் மழை!

அவசர உதவிகளுக்கும்
காதுகொடுக்கும்
மனிதாபிமானத்தை
இறைஞ்சியே பெற வேண்டியிருப்பது
இந்தக் காலத்து அவதி!

அவதிகள் எங்கிருக்கின்றன
என்பதை விட
வீட்டிலேயேயிருக்கின்றன என்பதற்கான
முன்னுதாரணம்
பிள்ளைகளுக்கு பெற்றோர்;
பெற்றோருக்கு பிள்ளைகள்

அலுக்காதவரைக்கும்
எதிர்க்காதவரைக்கும்
எதுவும் தெரிவதில்லை அவதியாக
எவர் கண்களுக்கும்!

கடுகை மலையாக்கும்
மருமகள் வாய்க்கும்
கூட்டுக்குடும்ப வேர்களில்
வெந்நீரூற்றும்
விரல்களாகின்றன அவதிகள்!

ஏழரைச் சனியில்
எள்ளளவும் நம்பிக்கையின்றி
எள்ளிநகையாடுபவர்களைக் கூட
எள் தீபமேற்ற வைத்துவிடுகின்றன
எண்ணிடலங்கா அவதிகள்!

அவதிகளால் நாம் படும்
அவதிகளுக்கெல்லாம்
அருமருந்தாகிறது
மரண அமைதி!
மயான அமைதி!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (21-Nov-22, 2:51 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 80

மேலே