காதல் விண்வெளி
அந்த
வெண்கல நிற
விண்கலம்
உலோகக் கதவுகளை
விரித்துக்
காத்திருக்கிறது.
நானும்,
என்
தேசத்து தேவதையும்
செவ்வாய் கிரகம்
போகிறோம் .
பிடிக்கவில்லை.
உருகும் போதே உலர
வைக்கும்
இந்த
உலைக்கள உலகம்
பிடிக்கவில்லை .
பூமி மக்களுக்கு
பனித்துளி கூட
பாதம்
கழுவவே பயன்படுகிறது.
காதலைக்
கழுவிலேற்று
என்று
கால்கள் கூட
கத்துகின்றன.
அந்தஸ்தின்
அட்டவணைகளில்
அன்புக்கு எதிராய்
அரிவாள் தான்
சாய்க்கப்பட்டிருக்கிறது.
எனவே,
தேடாதீர்கள்
என்று
சீட்டெழுதி விட்டு
சத்தமில்லாமல்
செவ்வாய்
செல்கிறோம் .
செவ்வாயில்
உயிர்களில்லை
என்பதெல்லாம் இனி
சரித்திரத்திலிருந்து துரத்தப்படும்.
எங்கள்
இருவர்
பெயர்களும்
துருவங்கள்
வரை பொறிக்கப்படும்.
விண்கலம்
ஓர் ஆகாய
திமிங்கலமாய்
காலத்தை வென்று
கலத்தை செவ்வாயில்
நடுகிறது .
காதலுக்கு எதிர்ப்பில்லா
காற்றில்லா தேசமது ,
எங்களிடம்
மட்டும்
ஆக்சிஜன்
அணிகலன்கள்.
மணித்துளிகள்
மங்க மங்க
செவ்வாய் ஓர்
சவக்காட்டு ஊதுபத்தியாய்
அமைதி கெடுக்க
ஆரம்பித்தது .
வற்றிப் போன
வசந்தத்துக்கு
வாழ்க்கை என்று பெயரா ?
எதிர்ப்பில்லா தேசத்தில்
உதிர்ப்பதெல்லாம்
சட்டங்களே .
ஆனால்
மக்கள்
இல்லா தேசத்தில்
மணி மகுடம்
எதற்கு ?
சமஸ்தானம்
அஸ்தமனமானபின்
சிம்மாசனங்கள்
இருந்தென்ன
சரிந்தென்ன ?
முடிவெடுக்கிறோம்,
இனி,
வௌவால்களாய்
வாழ்வதென்றாலும்,
பூமியின்
புதர்களோடுதான்.
விண்கலம்,
மீண்டும்
எங்களை ஏற்றி
பூமி நோக்கி பாய்ந்த
போது தான்
விண்கலக்
கருவிகள்
சினிமாபோல்
சட்டென
செயலிழந்தன.
பிடி நழுவிய
விண்கலம்
கீழ் நோக்கிப்
பா .ய்ந்து
கடலில் . . . . .
திடுக்கிட்டு விழித்தேன்,
சாரளம்
வளியே சாரல்
அடித்தது .
மேஜை மீது
‘காதல் .’
தலைப்பிட்ட
காகிதம் ஒன்று
நான்
கவிதை நிரப்பக்
காத்திருந்தது .