187 சிறந்தோர் தாழ்ந்தோரைப் பேணுதல் செல்வம் - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 14
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் வரலாம்)
பதிமுத லதிகா ரத்தோர்
= பண்ணவர் உழவர் மேலோர்
மதியுறு பரதர் நூலோர்
= மருத்துவர் முதலோர் தத்தம்
விதிவழி யொழுகித் தம்மை
= மேவுறு தாழ்ந்தோர் தம்மை
அதிதயை யொடுநன் கோம்பி
= ஆண்டிடக் கடனா மாதோ. 14
- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நாடாளும் முதன்மை அதிகாரத்தில் உள்ள மன்னர், அந்தணர், வேளாளர் எனப்படும் மேன்மையானவர்கள், அறிவு நுட்பமுடைய வணிகர், உயிர் நோயாகிய அறியாமையை அகற்றும் நூலாசிரியர், உடல் நோய் தீர்க்கும் மருத்துவர் முதலியவர்கள் அவரவர்களுக்கு உரிய முறைப்படி நடந்து தம்மைச் சார்ந்து வாழும் தாழ்ந்தோரை மிக்க பரிவுடன் நன்கு பாதுகாத்துப் பேணுதல் கடமையாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
பதி - நாடு. பண்ணவர் – அந்தணர், முனிவர். உழவர் - வேளாளர். பரதர் - வணிகர்.