ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலை 5
ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலைத் தொகுப்பை இயற்றியவர் எங்கள் ஊரைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் என்ற சனகை.கவிக்குஞ்சரம் ஆவார்.
ச.சோமசுந்தரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோழவந்தான் என்ற ஊரில் தெற்கு ரத வீதியில் வாழ்ந்து வந்த சண்முகம் பிள்ளை – தெய்வானை அம்மையாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவர் தன் ஐந்தாம் வயதில் தெற்கு ரத வீதியின் மேற்குப் பகுதியில் அமைந்த சிதம்பர விநாயகர் கோயிலின் திண்ணைப் பள்ளியில் ஆசிரியர் அழகர்சாமி தேசிகரிடம் ஆரம்பக் கல்வி கற்றார்.
தன் 12 ஆம் வ்யதில் இவர் தன் மாமனாகிய பெரும்புலவர், இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தன் 14 வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை வாய்க்கப் பெற்றார். இவரது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அரசஞ் சண்முகனாரும், மற்ற புலவர்களும் இவருக்கு ‘கவிக்குஞ்சரம்’ என்று பட்டம் ஈந்தனர். இவர் பின்னாளில் கவிக்குஞ்சரம் பிள்ளை என்றழைக்கப் பட்டார்.
இவர் தன் வாழ்நாளில் சீரடி சாய்பாபா அவர்களின் மகிமையை அறிந்து அவரைப் பற்றி பக்திப் பாடல்களை காப்புச் செய்யுள் நீங்கலாக 28 வெண்பாக்களில் எழுதியிருக்கிறார்.
என் தகப்பனார் கைப்பிரதியாக இருந்த இந்த ‘ஸ்ரீ சாய்பாபா தமிழ் மாலை’யை என் இளைய தம்பி V.K..வெங்கடசுப்ரமணியனின் மாமனார் சின்னாளபட்டியிலிருக்கும் திரு.T.S. இரத்னம் முதலியார் அவர்கள் மூலம் அதே ஊரிலிருக்கும் புலவர் திரு. துரை. தில்லான் உதவியுடன் பதிப்பித்தார்கள்.
'ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலை' யிலிருந்து 17 - 20 பாடல்களைத் தருகிறேன்.
தடையிலா நல்வாழ்வு தந்தவரே
இடம்பொருளோ டேவலுமற் றெல்லாமும் பெற்றுத்
தடங்கலின்றி நான்வாழத் தக்க – திடம்பெறவே
நோயின்றி வைத்தருள்வாய் நூலறிஞர் போற்றுகின்ற
சாயிபா பாவே சரண். 17
தூய திருவடியைப் பற்ற அருளியவரே
இணக்கமொடு நின்னை இதயத்தில் எண்ணி
வணக்கம் செலுத்தி வழுத்த – எனக்குனது
தூயதிருப் பாதம் துணையெனவே பற்றவருள்
சாயிபா பாவே சரண். 18
தத்துவங்களைக் கடந்த செம்பொருளே
தத்துவந்தொண், ணூற்றாரும் தாண்டிச் சதானந்த
சித்திபெற்று வாழுகின்ற செம்பொருளே – சத்தியத்தில்
தோயும் எனது துதிகண் டிரங்கியருள்
சாயிபா பாவே சரண். 19
நந்தா விளக்கே
நந்தா விளக்காக ஞானச் சுடர்கண்ட
சிந்தா மணியே ஜெகத்குருவே – சிந்துசூழ்
தாயகமாம் இந்தத் தமிழகமெல் லாம்பரவும்
சாயிபா பாவே சரண். 20
(தொடரும்)