முதிர்கண்ணன்---பாடல்---

முதிர்கண்ணன்
மெட்டு : என்ன இதுவோ? என்னைச் சுற்றியே
பல்லவி :
முந்திப் பிறந்து முள்ளில் நடக்கும்
பயணம் எதுவரையோ?
வெப்பம் சுமந்து வெந்து அலையும்
தனிமை பெரும் துணையோ?
காலம் மாற ஏங்கும் மனம்
காயம் தாங்கி வாழும் தினம்
யார்? தந்த சாபம்
என எண்ணிப் பார்க்கிறேன்
என் நெஞ்சப் பூவில்
ஒரு மௌனம் சேர்க்கிறேன்...
முந்திப்...
சரணம் 1 :
அன்னையாய்த் தந்தையாய்த் தம்பி தங்கை வாழ்க்கையில்
பூங்குடை நீட்டியே கைகள் சோர்கிறேன்
வான்முகில் போல்மனம் அன்பைத் தூவிக் காப்பதில்
ஆசையைத் தேவைக்கு ஒத்தி வைக்கிறேன்
ஊரார் பார்வையோ?
கொலை வாளென உயிரையும் அறுத்துச் செல்லும்
உறவின் கேள்விகள்
மன அமைதியை நொடியினில் கலைத்துக் கொல்லும்
ஆறு காய்ந்த மண்மீது ஓடம் போல வாழ்கிறேன்...
முந்திப்...
சரணம் 2 :
ஓரிடம் கூடிடும் சொந்தம் கண்டு அஞ்சியே
கானலாய்த் தூரத்தில் தள்ளிப் போகிறேன்
திருமண அழைப்பிதழ் பார்க்கும் அந்த வேளையில்
தனிமையின் கீறலில் நொந்து மீள்கிறேன்
ஏதோ? பாதையில்
ஓர் இலையெனக் காற்றினில் நகர்ந்து வந்தேன்
வீட்டின் சூழலால்
மனம் காதலில் விழுவதைத் தவிர்த்தும் வந்தேன்
காக்க வைக்கும் காலத்தால் காயம் இன்னும் கூடுதே...
முந்திப்...
(க/உ/உ0ருச)