தீந்தமிழ் சொல்லால் கூறடி

கன்னியவளை கண்டேன்
நிலவில் நிலவாக !
அழகிய பெண்ணே
பார்த்ததும் உன்னை
பரவசம் அடைந்தேன் !
ஆனந்தக் கண்ணீரால்
குளிர்ந்தது மேனியடி !

காதலில் விழுந்தவர்
நிலையும் இதுதானா ?
பாவையுன் காந்தவிழி
பார்வையில் படுவேனா ?
உனதழகில் வீழ்ந்தவன்
உணர்வின்றி நிற்கிறேன்
உயிர்கொடு எனதுயிரே !

சாதகமாக பதிலளித்திடு
போதகராக மாறிடாதே !
வேதனையில் ஆழ்த்தாதே
சோதனையும் செய்திடாதே !
தாங்கிடா உள்ளமெனக்கு
தாரிகையே உணர்ந்திடு
தாமதம் வேண்டாம் !

அரும்பிய எனது காதலால்
விரும்பிய மனம் கேட்கிறது !
கரும்பினிய காரிகை அறிக
இரும்பில் ஆனதல்ல இதயம் !
திரும்பிப் பாரடி என்னையும்
தீந்தமிழ் சொல்லால் கூறடி
சம்மதம் என்ற வார்த்தையடி !

பழனி குமார்
02.05.2023

எழுதியவர் : பழனி குமார் (2-May-23, 2:50 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 1015

மேலே