சிரிப்பின் சிறப்பு

சிரிப்பின் சிறப்பு

சிரிப்பின் சிறப்பை சொல்வதற்கு
சிற்சில வார்த்தைகள் போதாது
சிரித்து வாழும் மனிதர்களை
சீர்கேடு எதுவும் சீண்டாது.

சிரித்த முகத்துடன் இருந்தாலே
திருமகள் உன்னில் தங்கிடுவாள்
அன்பிடும் புன்னகை நீசெய்தால்
அலைமகள் உன்னைக் கும்பிடுவாள்

பூவினும் மெல்லிய உதடுகளில்
புன்னகை நீயும் செய்கையிலே
புத்தொளி தோன்றும் முகத்தினிலே
புதுபலம் பொங்கும் அகத்தினிலே

வாய்விட்டு சிரிக்கும் மனிதரிடம்
நோய்கள் நெருங்கிட அஞ்சிடுமே
மெல்லிய புன்னகை செய்தாலே
மேன்மைகள் உனைவந்து கொஞ்சிடுமே

நகைச்சுவை உணர்வு இல்லார்க்கு
நாளும் இருளாய்த் தோன்றிடுமே
புன்னகை மன்னன் நீயானால்
புதுப்புது தோழமை ஊன்றிடுமே

மழலையின் சிரிப்பில் மனம்மகிழும்
மனைவியின் சிரிப்பில் மதிமயங்கும்
காதலி சிரிப்பில் களிபெருகும்
வேதனை விலகும் வளம்சேரும்

உள்ளும் புறமும் அமைதிபெற
ஒவ்வொரு நாளும் உறுதிபெற
வாழ்வில் என்றும் ஏற்றம்பெற
வாய்விட்டு சிரித்து வாழ்ந்திடுவோம்.

பாவலர், பாஸ்கரன்

எழுதியவர் : பாவலர் . பாஸ்கரன் (10-May-23, 8:50 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
Tanglish : sirippin sirappu
பார்வை : 63

மேலே