தமிழன்

தமிழன்
தமிழன் தரணியில் சிறந்தவனாம்
தாழ்ந்து பணிந்திடும் பண்பினனாம்
யாரையும் உறவாய் நினைப்பவனாம்
நீரையும் நிலத்தையும் துதிப்பவனாம்

கோழை குணத்தை வெறுப்பவனாம்
மேழித் தொழிலில் உயர்ந்தவனாம்
அகிலத்தின் கலைபல அறிந்தவனாம்
ஆடிப் பட்டத்தில் விதைப்பவனாம்

நிமிர்ந்து நிற்கும் அடையாளம்
நிலையாய் ஆயிரம் கொண்டவனாம்
இயலிசை நாடகம் இன்தமிழை
அயலவர் வியந்திட மொழிபவனாம்

ஈனச் செயல்களை புறம்தள்ளி
மானம் பெரிதென வாழ்பவனாம்
ஈந்திடும் குணத்தை இயல்பாக
இதயம் தன்னில் கொண்டவனாம்

வீரமும் காதலும் இருகண்ணாய்
விளங்கும் எண்ணத்தில் வல்லவனாம்
தயையும் தந்தையும் தெய்வமென
தாங்கிடும் உள்ளம் உள்ளவனாம்

அன்பும் அறமும் இல்வாழ்வின்
அடிப்படை என்றே சொல்பவனாம்
ஊக்கத்தில் தேடிடும் ஆக்கமதில்
உயிர்வாழும் எண்ணம் உடையவனாம்

ஓடியும் ஆடியும் உழைப்பதனை
ஊருக்கும் அளித்திடும் அன்பினனாம்
தேடியும் நாடியும் வருவோர்க்கு
தேவைக்கு மேல்தரும் பண்பினனாம்

மற்றவர் துயரம் போக்கிடவே
மகிழ்ந்து தன்னையும் தருபவனாம்
ஏற்பது இகழ்ச்சி என்றெண்ணி
எளிய வாழ்க்கை வாழ்பனாம்.

சொ.பாஸ்கரன்

எழுதியவர் : பாவலர் . பாஸ்கரன் (13-May-23, 8:28 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
Tanglish : thamizhan
பார்வை : 48

மேலே