கண்ணதாசன் வாலி சந்திப்பு

கவியரசு: வா தம்பி வாலி, ரொம்ப நாள் பூமியிலே வாழ்ந்துட்டு இப்போ என்னோட சேர்ந்துகொண்டாய்.

வாலிப வாலி: வணக்கம் அண்ணே. இன்னும் பதினஞ்சு வருஷம் இருந்திருந்தா, நூற்றுக்கு நூறு போட்டிருக்கலாம்.

கவியரசு: ஏன் தம்பி சொல்லமாட்டே, இன்னும் எவ்வளவோ பாட்டுக்களை எழுதணும்னு நான் எவ்வளவோ கனவு கண்டேன். அதைத்தவிர அர்த்தமுள்ள இந்துமதம் பற்றி, இன்னும் பத்து புத்தகங்கள் வெளியிடணும்னு எவ்வளவோ கனவு கண்டேன். என் வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போயிடிச்சு. இந்த கிருஷ்ணன், அம்பத்தி அஞ்சு வயசுலேயே என்னை இங்கே கொண்டுவந்து தவிக்கவிட்டுட்டான்ப்பா. நான் அன்னிக்கே இந்த தத்துவத்தை பாட்டில் எழுதிவிட்டேன்.
“மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு, பாவம் மனிதனென்று”
என்னை பார்க்கையில் நீ எவ்வளவோ கொடுத்துவச்சவம்பா”.

வாலிப வாலி: அண்ணே, நீங்க சொல்றது ஓரளவுக்கு உண்மைதான். நான் எம்எஸ்விக்கு மட்டுமே அஞ்சாயிரம் பாட்டுகள் எழுதினேன். நீங்ககூட அவருக்கு அவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கமாட்டிங்க.
(அப்போது அங்கே மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் (எம்எஸ்வி) வருகிறார்)

எம்எஸ்வி: வாலி தம்பி, நீங்க கொஞ்சம் ஓவராக புளுகிட்டிங்க. கிட்டத்தட்ட நாலாயிரம் பாடல்கள் வரைக்கும்தான் நீங்க எனக்கு எழுதிக்கொடுத்தீங்க. அதில, சினிமாக்களில் வந்த பாடல்கள் சுமார் மூவாயிரம் இருக்கும். வணக்கம் கவியரசரே. நீங்க பாட்டுக்கு அமெரிக்கா போய்ட்டு வாரேன்னு சொல்லிட்டு, அங்கேயிருந்து நேரடியாக மேலுலகத்திற்கு சென்றுவிட்டீங்க. நீங்க இறந்தபின் எனக்கு வாழ்க்கையே வெறுத்துபோய்ட்டுதுங்க.

கவியரசு: எனக்கும் அப்படிதான்டா விசு. உன்னோட சேர்ந்து பாட்டு எழுதினா, அந்த அனுபவமே வேறுடா. எனக்கு எவ்வளவு சவால்களை நீ உட்டுருப்பே. அதைப்போலவே நானும் உனக்கு எப்படியெல்லாம் சந்தங்கள் தந்தேன்.

வாலிப வாலி: உங்க ரெண்டு பேருக்குமே சில விஷயங்களில் கொடுப்பினை இல்லை. நான் பாரு, நீங்க இருந்தவரைக்கும் உங்களுக்கு பாடலுக்கு மேல் பாடலை எழுதித் தள்ளினேன். அதுக்கு பிறகு இளையராஜாவுக்கும் மிகவும் அதிக அளவில் பாடல்கள் எழுதினேன். ஏன், நம்ம சின்ன பையன் ரஹ்மானுக்கு கூட நான் பாடல்கள் எழுதினேன். இந்த மாதிரி வாய்ப்பு உங்களுக்கெல்லாம் கிடைக்கவில்லையே. பாவம், எம்எஸ்விக்கு பொல்லாத நேரம், இளையராஜா வந்து இவரை மொத்தமாகவே முழுங்கிவிட்டார். இதோ கேளுங்க, நான் அன்னிக்கே எழுதின பாட்டு, கொஞ்சம் மாற்றம் பண்ணி தருகிறேன், எம்எஸ்வி போடுங்க மெட்டு.
“நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்
எம்ஜியாருக்கு இந்த பாட்டை எழுதினவன் நான் நான்
என்னிடம் அதிருஷ்டம் இருக்கிற வரைக்கும்
இன்றும் என்றும் தேவை என் சினிமா பாடல்கள்”

எம்எஸ்வி: வாலி நீங்க பெரிய ஆளுதான்யா, கவியரசு மாதிரி சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி போடாம, ஆளுக்கு ஏத்தமாதிரி சந்தங்கள் போடுவதில் நீங்க பலே கில்லாடிதான்.
இப்போ நீங்க சொன்ன விஷயங்களை கேட்பதால் எனக்கு பெரிய மனவருத்தம் ஒன்றும் இல்லை வாலி. இளையராஜா கூட சேர்ந்து இரண்டு படங்களுக்கு இசையமைத்தேன். இருந்தாலும், என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. சரி விடுங்க, எல்லோருக்கும் எப்போதும் எல்லாமே எப்போதும்போல அமையுமா.என் பையன் மாதிரி இருக்கும் ரஹ்மான் இசையில் கூட நான் பாடியிருக்கிறேன். ஆனாலும், என்னுடைய வாழ்க்கை பொருளாதாரத்தையே கதிகலங்க வைப்பதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர் இளையராஜா என்பதையும் என்னால் மறுக்கமுடியாது.
ஜனங்களின் இசை ரசனையும் மாறிக்கொண்டு வருகிறது. நானே டிஎம்எஸ்ஸை கூட, சைடு ட்ராக்கில் போட்டுவிட்டு, spb, ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்றவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்துப் புது மாதிரியான பாடல்களைத்தான் போட்டேன். இருந்தாலும், ஜனங்க இளையராஜாவின் மெட்டுக்களை அதிகம் ரசிக்க ஆரம்பித்தார்கள். இதெல்லாம் காலத்தின் கோலத்தால் விளைந்த மாற்றங்கள். என்ன சொல்றீங்க கவியரசரே? நீங்க என் மெட்டுக்கு பாட்டு போட்டீங்க. நானும் உங்க மீட்டருக்கு மெட்டு போட்டேன். ஆனால், என் இசையை இளநீர் காயில் இருக்கும் வழுக்கை போல் ஆக்கிவிட்டார் இளையராஜா. அதனால், என் வாழ்க்கையில் விழுந்த வழுக்கை நான் மறையும்வரை மறையவே இல்லை. யாரையும் சொல்லிக் குற்றமில்லை. நம்முடைய விதி அப்படி இருந்தது.

கவியரசு: சரியாத்தாண்டா சொன்னே விசு. நான் மாமாவின் (இசையமைப்பாளர் மறைந்த கே வி மகாதேவன்) இசையில் எழுதின பாட்டுத்தான்டா நம் மூவருக்குமே " உன்னைச்சொல்லி குற்றமில்லை, என்னைசொல்லி குற்றமில்லை; காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி, கடவுள் செய்த குற்றமடி"
எனக்கு ரொம்ப மனக்கஷ்டம் என்னன்னா, நானும் இளையராஜாவிற்கு நிறைய பாடல்கள் எழுதினேன். எழுதியும் இருப்பேன், இன்னும் கொஞ்ச வருடங்கள் உயிரோடிருந்தால். ஆனால், அன்னக்கிளி படத்திற்கு அவர் கொடுத்த இசை அவரை ஓஹோ ஏன்று தூக்கிவிட்டுவிட்டது. அதே நேரத்தில் எல்லா படத்தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் கூட அவரை ஒரேடியாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, உன்னை கீழே தூக்கி போட்டுவிட்டார்கள் என்று தான் நான் சொல்வேன். உன்னுடைய மார்க்கெட் சரிந்தபோது அதனுடன் என் இதயமும் சரிந்துவிட்டது விசு.

எம்எஸ்வி: கவியரசரே, உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நீங்கள் மறைந்தபிறகு என் வாழ்க்கையில் நிம்மதியும் மறைந்துவிட்டது. நாம் இருவரும் இணைந்து வெறும் சினிமாப்பாடல்களை கொடுக்கவில்லை. காலத்தால் அழியாத இந்தப் பாடல்களைப் போல, நாம் இருவரும் சரித்திரம் படைத்த இரு நெருங்கிய, உற்ற தோழர்களாகத்தானே வாழ்ந்தோம். இதை நம் தமிழ்ப்பட உலகம் நன்கு அறியும். இப்போது மட்டும், எனக்கு உடல் இருந்திருந்தால் நீங்கள் மேட்டர் போட ஒரு அருமையான மெட்டு போட்டிருப்பேன்.

வாலிப வாலி: சரி, இப்போ எதுக்கு அந்த பழைய பஞ்சாங்கத்தை பாடணும். நாம மூணு பேருமே இப்போ மேலுலகில் இருக்கிறோம். எனக்குப் புரியாத ஒரு விஷயம் ஏன்னன்னா, இங்கே சொர்கம் நரகம் அப்படி இப்படீன்னு சொன்னாங்க, ஆனால் ஒண்ணையும் காணோம், சொல்லப்போனால் நாம்கூட ரொம்ப உற்றுப் பார்த்தால்தான் கண்ணுக்குத் தெரிவோம். நல்ல உடலையும் உள்ளத்தையும் கொண்டு வாழ்ந்த நாம், இப்போது ஒரு சிறிய புள்ளியைக் காட்டிலும் சிறிதாக ஆகி, வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறோம்.

கவியரசு: இந்த மாதிரி நாம் இருப்பதே, நரகத்தில் இருப்பதுபோலதான் இருக்கிறது. நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும், நான் இங்கே வந்து முப்பது வருடத்திற்கு மேலே ஆகிவிட்டது என்று. என்னைப்பொறுத்தவரையில் இங்கு நேரம் என்பதைப் பற்றிய சிந்தனையே இல்லை. என்ன விசு, ஏன்ன எதோ தீவிரமா யோசிக்கறே?

எம்எஸ்வி: இல்லை அண்ணே, நம்ம ராமமூர்த்தி, (எம் எஸ் வியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்தவர். விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி என்று சிறப்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர்கள்), எங்கேன்னு தேடிகிட்டு இருக்கேன்.

கவியரசு: ராமமூர்த்தி இங்கு வந்து கொஞ்ச நாட்கள் மட்டுமே தங்கிவிட்டு, சீக்கிரமாகவே உகாண்டா நாட்டிற்கு போய்விட்டார். அங்கே ஒரு மாட்டுப்பண்ணை எஜமானனின் பெண்ணாக பிறந்துவிட்டார் என்று, கே. பாலச்சந்தரை ஒரு முறை சந்தித்தபோது சொன்னார்.

வாலிப வாலி: நான் பாலச்சந்தரின் பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறேன். "வாலி பாட்டு கேட்டா, கோலி சோடா சாப்பிட்ட திருப்தி" இருக்கும் என்று அவர் ஒரு பேட்டியில் சொன்னார். நானும் அவ்வப்போது நமது பழைய ஆட்களை இந்தமாதிரி புள்ளிவடிவத்தில் பார்க்கிறேன். வெறும் புள்ளியாக இருந்தாலும், நாம் அவற்றை பார்த்தவுடனே அந்த புள்ளிகளுக்குரியவரின் முகம் நம் கண்ணுக்குள் தெரிகிறது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

கவியரசு: உண்மைதாம்பா வாலி. எம் ஜீ ஆர், சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன், டி எம் சௌந்தர்ராஜன், எம் ஆர் ராதா, முத்துராமன், கே வி மஹாதேவன், அசோகன், நம்பியார், மனோகர், ரகுவரன், ஜெய் சங்கர் ரவிச்சந்திரன் போன்ற பலர், உலகத்தின் பல் வேறு நாடுகளில் மீண்டும் பிறந்துவிட்டார்கள். ஏதோ நம்மைப் போல சிலரைத்தான் இன்னும் பூமிக்கு இன்னமும் அனுப்பவில்லை.

எம்எஸ்வி: அண்ணே, ஒரு வேளை, முக்தி சக்தி அப்படீன்னுட்டு நம்மை மீண்டும் பிறக்காமலேயே செய்து விடுவார்களா? அப்படி இருந்தால் எனக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை. எந்த நாட்டில் பிறந்தாலும் சரி, நான் மீண்டும் ஒரு இசையமைப்பாளராக பிறக்க ஆசை படுகிறேன்.
(இதைச் சொன்னவுடனேயே எம்எஸ்வி அங்கிருந்து மறைகிறார்)

வாலி: என்ன கவியரசு அண்ணே, தம்பி எங்கே போயிருப்பார்?

கவியரசு: ஒரு முறை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை பார்த்தேன். அப்போ அவர் என்னிடம் சொன்னார் "நீங்க பாட்டு எழுதவந்த பிறகு விஸ்வநாதன் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. அந்த மனவேதனையில் நான் பிரம்மாவுக்கு ஒரு விண்ணப்பம் வைத்தேன். அதின், நான் எம்எஸ்வி மீண்டும் பிறக்கும்போது, நானும் அதே ஊரில் பிறக்கவேண்டும். நான் இசையமைப்பாளராக இருக்கவேண்டும், அவர் என்னிடம் பாடலாசிரியராக வரவேண்டும், நான் அவருக்கு ஒரு பாடல் கூட எழுதுவதற்கு வாய்ப்பில்லாமல் செய்யவேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் கெஞ்சிக்கேட்டிருக்கிறேன்"
இப்படி சொல்லிவிட்டு, பட்டுக்கோட்டை மறைந்துவிட்டார். பின்னர் யாரோ சொன்னார்கள், அவர் மத்திய வங்காள மாநிலத்தில் ஒரு இசையமைப்பாளரின் மகனாக பிறந்துவிட்டார் என்று.

வாலிப வாலி: அப்படீன்னா, இப்போ எம்எஸ்வி அதே ஊரில் பிறக்கத்தான் போயிருப்பாரா?
கவியரசு: அப்படியும் இருக்கலாம். இன்னொரு அதிர்ச்சியான செய்தியும் எனக்கு கிடைத்தது.
வாலிப வாலி: அப்படி என்ன அதிர்ச்சியான செய்தி அண்ணே?

கவியரசு: நீயும் நானும் ஸ்பெயின் நாட்டில் பிறந்து புருஷன் பொண்டாட்டியாக வாழப்போகிறோம் என்று.

வாலிப வாலி (அதிர்ச்சியுடன்): ஐயோ, ஏன் அண்ணே இப்படி கொடுமை படுத்தறாங்க நம்மை?

கவியரசு: இன்னொரு கொடுமையை கேளு, அங்கே ஸ்பெயின் நாட்டில அறிஞர் அண்ணாதான் உன்னுடைய அப்பாவாம். நீ அவளுக்கு மகளாம். அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்கிறாராம். அவருக்கு, குடிக்கும் பழக்கமே கிடையாதாம். பாவம், உன் பாடு. பெருந்தலைவர் காமராஜ் தான் என்னுடைய அம்மாவாம். நான் அவருக்கு வளர்ப்பு மகனாம். அவர் அந்த ஊரின் குடிசை மாற்று வாரியத்தின் தொழிலாளர்களின் தலைவரின் மனைவியாம். கள்ளு, சாராயம், பிராந்தி, விஸ்கி என்றால் அவர்களுக்கு கொஞ்சம்கூட ஆகாதாம். இந்த மாதிரி இடத்தில பிறப்பதற்குப்பதில், ஒரு கள்ளு கடையின் முதலாளிக்குப் பிள்ளையாக பிறந்தாலும் பரவாயில்லை.

அதன் பிறகு கவியரசுக்கு வாலிப வாலி தென்படவில்லை. ஆனால், வாலியின் குரல் மட்டும் எங்கிருந்தோ அசரீரி மாதிரி கேட்கிறது.
"வீடுவரை மணிமாலா
வீதிவரை ஜெயமாலா
காடுவரை ஜபமாலா
கடைசிவரை தாசலீலா"

வாலிப வாலிக்கும் அதைப் போலவே கவியரசு தென்படவில்லை. ஆயினும் கவியரசின் குரல் மட்டும் எங்கிருந்தோ தொலைவில் கேட்பதுபோல இருந்தது.
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது வாலி பின்னாலும் ஒளிந்திருக்கும்
சினிமா என்றொரு ஊரிருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்
தண்ணீ அது தண்ணீ, தண்ணீ அது தண்ணீ"

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (31-May-23, 4:41 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே