அடுத்தது சுகமே
அடுத்தது சுகமே
*******************
ஆபத் திலுதவா ஆட்களின் மூலம்
ஆயிர மின்னல் அடுக்கிட லாமே
சாபத் தையள்ளிச் சாத்திடு வாரின்
சாகச நாடகம் சாக்கடை நீரே
கோபத் தையள்ளிக் கொட்டிடு வாரோ
குத்திடு மீட்டியின் கூர்முனை போலே
தீபத் தையேற்றத் திரியாய் நிற்பார்
தேவையைக் காணார் திருடரு மாமே
*
வேதங் ளோதும் வேலையைச் சாத்தான்
விருப்பொடு செய்ய விட்டிடு வாரே
நாதத் தினோசை நாற்றிசை முழங்கி
நாணேற் றப்பணம் நாடிடு வாரே
சோதனை செய்யும் சூத்திர தாரர்
சுருட்டியே வாழ்வில் சுகமடை வாரே
சாதனை யாளர் சார்பென வாகிச்
சகலமு மமுக்கிச் சாப்பிடு வாரே
*
ஏய்ப்பத னாலே இன்புற வார்தம்
எண்ணமும் செயலும் இருவே றாகும்
சாய்த்திடும் பக்கம் சாய்ந்திவர் கொள்ளும்
சத்திய மென்பத சாத்திய மாகும்
ஓய்ந்திடா வண்ணம் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வகையில் உருவெடுப் பாரே
ஆய்ந்திவர் கண்முன் அகப்படும் வேளை
அகன்றிடு போதும் அடுத்தது சுகமே
*
மெய்யன் நடராஜ்