காதல் பிசாசு
காதல் பிசாசு
***************
கல்யாண மென்கின்ற கட்டாய மந்திரத்தில்
நில்லெனில் நில்லாத நீலியாம் - சொல்லாமல்
நெஞ்சகம் நின்று நிதமாடும் காதல்பேய்
வஞ்சியர் என்றாலோ வம்பு
*
உன்னிட மென்னுயிர் உள்ளதென் பாரவர்
தன்னுயிரை தாவவிடுந் தந்திரம் - இன்னுமுள
எல்லா பிறவியிலும் இம்சிக்கும் காதல்பேய்
அல்லுபக லாடும் அணங்கு
*
செல்லாதக் காசாய் சிலகாதல் பேயிருக்கும்
சொல்லாலே ஆட்டிவைக்கும் சூசகமாய் - நல்ல
மனசுக்குள் நர்த்தன மாடுமதன் சேட்டை
தினமேங்க வைக்கும் தினுசு
*
பெண்ணென்றால் பேயிரங்க பேய்க்கிரங்கும் வர்க்கமென
ஆண்களுக்குப் பேருண்டு ஆனாலும் - கண்களுக்குள்
கண்வைக்கும் காதல்பேய் காலமெலாம் ஆண்நெஞ்சை
புண்படுத்தும் காரணத்தால் பெண்
*
போர்செய்யும் ஏவுகணை பூவையரின் கண்களன்றோ
நேர்கொண்டு தாக்கிவிடும் நெஞ்சத்தை - சீர்தூக்கி
தோள்வைக்கும் ஆண்கள் துடித்திருக்க வேண்டுமென்றே
வேள்கொண்டும் தாக்கும் விரைந்து
*
தாக்கும் குணமுடைய தாயாடும் காதலென
மூக்கும் முழியுமாய் முன்னிருக்கும் - நோக்கும்
விழிவழி உள்ளம் விழுந்தாண்கள் வாழ்வை
பிழிந்தெடுக்கும் கொல்லிப் பிசாசு