பூனை
இந்தக்கதையை பற்றி சொல்வதானால் நானும் அவளும் சரியான இடைவெளிகளில் மாற்றி மாற்றி எழுதியதுதான்.
அப்படி எழுதுவதன் நோக்கம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவோ, எங்கள் சொந்த பிரச்னைக்கு தீர்வு காணவோ அல்ல, யார் யாரை முதலில் வீழ்த்துவது என்பதில்தான் கதை நகர்கிறது.
நான் மனதுக்கு தோன்றியதை எழுதி முடித்துவிட்டு தாள்களை டேபிள் மீது பரப்பி வைத்துவிட்டு சாளர திரைகளை விலக்கி எதிரே முட்டி மோதும் வங்காள கடலை நேரம் போவது தெரியாமல் பார்த்து கொண்டிருப்பேன்.
அவள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பூனை போல் மெதுவாக நடந்து வந்து அந்த தாள்களில் தொடர்ச்சியாக அவள் பங்குக்கு கற்பனையில் உதிப்பதை எழுதி வைத்துவிட்டு மீண்டும் அவளின் வேலைகள் நோக்கி போய்விடுவாள்.
பூனை போல் அவள் வருகிறாள் என்று சொன்னேன் அல்லவா?
அவள் ஒரு பூனைதான்.
பூனைதான் உன் மனைவியா அல்லது காதலியா என்று யோசிக்க தோன்றுகிறதா உங்களுக்கு?
எனக்கும்தான்.
குளிர்ந்த காற்றுக்காக அவ்வப்போது நான் திறந்து வைத்திருக்கும் பின் வாசல் கதவின் வழியாக என்றேனும் ஒருநாள் பெரிய புலி ஒன்று வரக்கூடும் என்பதுதான் உச்சகட்ட பயமாக எனக்கு நீண்ட நாட்கள் இருந்தது.
புலி காட்டில்தானே வாழும்? அது எப்படி நகரத்துக்கு வரும்?
எல்லா நிலமும் வனமாக இருந்துதானே நகரமாக அழிந்து இருக்கிறது?
புலியிடமிருந்து ஒருவன் தன்னை தற்காத்து கொள்வது எப்படி என்ற புத்தகம் கிடைக்குமா என பல்வேறு நாட்கள் பல புத்தக கடைகளுக்கு சென்று விசாரித்தும் பல பதிப்பகங்களுக்கு கடிதங்கள் எழுதியும் எந்த பலனும் இல்லாமல் போனது.
இறுதியில் இந்த அனுபவங்களை வைத்துக்கொண்டு நானே ஒரு புத்தகம் எழுதி விட்டேன்.
அதை ஒரு நண்பருக்கு படிக்க கொடுத்து விட்டு அவர் பதிலுக்கு காத்திருந்தேன்.
அவர் வீட்டு பூனை (பெயர் சிட்டிபாபு) அதை சிதிலமாக்கி அதில் எந்த வரிகளையும் படிக்க முடியாமல் செய்து விட்டதாக கூறியவர் ஒரு பிளாஸ்டிக் கவரை முடிச்சிட்டு என்னிடம் அதிக துக்கத்துடன் கொடுத்தார்.
அதில் சுக்கல் சுக்கலாக காகித குவியல்.
நான் எழுதியதுதான்.
எனக்கு ஒரு ஸ்டெனோ தேவைப்பட்டாள்.
நான் சொல்ல சொல்ல அதை குறிப்பு எடுத்துக்கொண்டு வரவேண்டும்.
எனக்கு எப்போது எழுதுவதற்கான சிந்தனைகள் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. எனவே இருபத்தி நான்கு மணி நேரமும் என் அருகிலேயே இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தேன்.
அவள் ஒத்துக்கொண்டாள். அதுதான் பெரு வியப்பு.
உன் கணவர் இந்த உடன்படிக்கைக்கு ஒன்றும் சொல்லவில்லையா? அவருக்கு இதில் சம்மதம்தானே?
அவர் எகிப்தில் ஒரு பூஜைக்காக சென்று உள்ளார். அவர் வரும்வரை நான் பணி செய்வேன். என் பெயர் கேட்டி என்றாள்.
கேட்டி என்றால் பூனையா என்று கேட்டேன்.
இல்லை.
என்ன பூஜை உன் கணவருக்கு?
எகிப்தில் உள்ள மம்மிஃபைடு செய்யப்பட்ட பூனைகளை முன்வைத்து செய்யப்படும் முன்னோர்கள் வழிபாடு.
அதன்பின் கேட்டியிடம் அவள் சொந்த வாழ்க்கை குறித்து எதுவும் நான் விருப்பத்துடன் கேட்கவில்லை.
குறிப்புகள் எடுக்கும்போது அவள் கண்கள் என்னையும் குறிப்பு புத்தகத்தையும் மாறி மாறி பார்க்கும்போது அது பம்பரம் போல் சுழன்று கொண்டே இருக்கும்.
முதலில் அதைப்பார்த்து தடுமாறியவன் பின் பழகி கொண்டேன்.
என் சிந்தனைகளை நான் சொல்லும் போது அதை அவள் முடுக்கம் கொடுக்கப்பட்ட பொம்மை போலவே எழுதி கொண்டிருப்பாள்.
நீ என்ன நினைக்கிறாய் கேட்டி என்று அவள் எழுதி முடித்தபின் கேட்பேன்.
அவள் அதுபற்றி விவரமாகவோ தெளிவாகவோ புரிந்து கொள்ள தனக்கு முடியவில்லை என்பாள்.
ஏன் கேட்டி?
உங்கள் சொற்கள் எப்போதும் அவைகளுக்குள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறது. உங்கள் மொழிக்கும் அர்த்தத்துக்கும் எந்த பிணைப்பும் இல்லை. யார் இதை நன்றாக உள்ளது என ஏற்றுக்கொண்டாலும் பூனைகள் இதனை ஏற்றுக்கொள்ளாது. என்றாள்.
ஏன்? பூனைகள் படிக்குமா? உனக்கு பூனை பாஷை தெரியுமா, கேட்டி…
ஒவ்வொரு பூனையும் ஒரு புலியின் சுருக்கப்பட்ட வடிவம். இதை உலகம் நம்பாது. ஏனெனில் பூனைகளை ஒரு மனிதன் நினைத்தால் கொல்ல முடியும்.
நான் ஜீவஹிம்சை செய்தவன் இல்லை என்றேன்.
அத்துடன் அவள் வீட்டு வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.
இப்படியே காலம் போனது.
நான் மௌரியர் காலத்தில் வாழ்ந்த ஒரு கர்ப்பிணி பெண் ஒருத்தி யாரும் அறியாது இரவுகள் எல்லாம் உழைத்து மௌரிய மற்றும் அச்செமேனியன் தூண்களில் பிரகடனங்கள் பொறிப்பது பற்றிய நாவல் ஒன்றையும்,
இங்கிலாந்தில் எழுத்தாளர்களை மட்டும் தொடர் கொலைகள் செய்து கொண்டிருந்த பேருந்து நடத்துனர் ஒருவரை பற்றிய வாழ்க்கை வரலாறையும் எழுதி பதிப்பித்து இருந்தேன்.
இளம் பெண்களிடையே (குறிப்பாக, காமசூத்ராவை மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கு மத்தியில்) இந்த நாவல்கள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.
கேட்டி இந்த புத்தகங்களை படிக்க மறுத்து விட்டாள்.
இப்படியும் சில நாட்கள் போனது.
நாளடைவில், அவள் கணவனின் நினைவு வரும்போது எல்லாம் ஏதேனும் பூனையின் படங்களை வரைந்து கொண்டிருப்பாள்.
காகிதங்களின் ஓரத்தில் குட்டி குட்டியாக வரைய தொடங்கினாள்.
எல்லாமே பூனைக்குட்டிகள்.
நிற்பது, நடப்பது, ஓடுவது, பாய்வது, பொருட்களை இழுப்பது, கூண்டில் அடைப்பட்டது, சிரிப்பது, அழுவது….
முதலில் காகித ஓரங்களில் வரைந்து வந்தவள் பின்னர் சுவர் கிச்சன் பாத்ரூம் ஹால் சோஃபா பிரிட்ஜ் என்று எல்லா இடங்களிலும் வரைந்து இருந்தாள்.
கரிய நிறக்கோடுகளில் விதம் விதமாக உடல் நெளிக்கும் பூனைகள்…
அவற்றை கவனமாக பெரிதாக நான் எடுத்து கொள்ளவில்லை.
நான் தூங்கும்போது என் முதுகிலும் ஒரு பூனை படத்தை வரைந்திருந்தாள்.
வெகு நாட்களாக எனக்கு இதுபற்றி எதுவும் தெரியவில்லை.
ஒருநாள், வீட்டுக்கு வந்திருந்த அசோக் எதேச்சையாக என் முதுகை பார்த்துவிட்டு என்னிடம் அதுபற்றி விளக்கிவிட்டு விவரம் கேட்க…
கேட்டியின் செயலாக இருக்கும் என்றேன்.
அசோக் தண்ணீர், சோப், எண்ணெய் என்று என்னவெல்லாமோ போட்டு அந்த படத்தை அழிக்க முயற்சி செய்தான்.
அழிக்க அழிக்க அந்த படம் என் முதுகில் சிறிதளவு கூட அழியவில்லை.
எழுத்தாளரே, அந்த சித்திரப்பூனை தன் வாலை அசைக்கிறது என்றவன் எழுந்து சென்று விட்டான்.
பூனை வாலை எப்படி அசைக்கிறது என்று மூன்று நான்கு பெரிய பெரிய கண்ணாடிகளை எதிர் எதிரே வைத்து கண்காணிக்க தொடங்கினேன்.
வால் மேலும் கீழுமாக செல்லும்போது ஒருவித குறுகுறுப்பும், இட வலமாக செல்லும்போது லேசான எரிச்சலும் வந்தது.
கேட்டி, என்ன காரியம் செய்து இருக்கிறாய் என்று அவளிடம் நான் கடிந்து கொண்டேன்.
சித்திரங்கள் ஒருவரிடமிருந்து உயிர் கொள்கிறது என்றால் அவர் பெற்ற சாபம் ஏதோவொன்று துரத்த தொடங்கி விட்டது என்று அர்த்தம் என்றவள் சில மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்தாள்.
எனக்கு பயமும் அருவெறுப்பும் ஒன்றாக வந்தது.
ஏதேனும் செய்து என்னை காப்பாற்று கேட்டி, என்று அவளை நான் கெஞ்ச தொடங்கினேன்.
எங்கள் பூர்வகுடிகளிடமிருந்து இதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றாள்.
கேட்டியால் சுவர்களில் வரையப்பெற்ற ஓவியங்களில் இப்படி ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பதை கவனிக்க தொடங்கினேன்.
இரவில் மல்லாந்து படுக்க நேரிட்டால் என் முதுகுக்கு கீழே ஒரு பூனை ஞீ… ஞூ…ஞீ… என குரலிடுவது துல்லியமாக கேட்டது.
ஒலியின் மரணஓலம் அது.
நள்ளிரவில் இந்த ஓசை கேட்டு விழித்து கொண்டு விட்டால் பின் தூக்கம் எளிதில் வராது.
வியர்த்து கொட்டும்.
காற்றுக்காக பின் வாசல் கதவை திறந்து வைப்பேன்.
நேற்று அப்படி செய்தபோது…
அடர் இருளில் மஞ்சள் நிறத்தில் பெரிய வால் ஒன்று காற்றில் அசைந்து ஆடி கொண்டிருப்பதை பார்த்தேன்.
அது புலியின் வால்.
நினைத்தபடியே புலி ஒன்று வீட்டுக்குள் வந்து விட்டது.
சில கணங்கள் மட்டுமே தெரிந்த அந்த காட்சியை நான் பிரமை என்று கடந்து செல்ல விரும்பவில்லை.
காட்சி மறைந்ததும் சப்தம் செய்யாமல் நான் கேட்டி அறைக்கு சென்றேன்.
அவள் தூங்கி கொண்டிருந்தாள்.
டார்ச் ஒளி அவள் மீது படர்ந்ததும் கண் புருவங்கள் நெறித்து இறுக்கி மூடியிருந்த கண்கள் ஒருமுறை சுருக்கி இறுகின. இமைகளுக்குள் கண்பாவை வால் போல் அசைந்தது.
என் முதுகில் ஏதோ சூடு பரவியது.
பூனையின் கதகதப்பான சூடு.
கேட்டியை நோட்டமிட்டேன்.
குறிப்புகள் எடுக்க வேண்டும் எழுந்து வா என்றால் என் பின்னே வர வேண்டிய பணிப்பெண் அவள்…
அவள் முதுகுக்கு கீழே புலியின் வால் முளைத்து இருந்தது.
அச்சத்தில் வியர்த்து போனேன்.
அந்த வால் படுக்கை எங்கும் தொப் தொப்பென்று விழுந்து விழுந்து ஆடியது.
எனது அறைக்கு வந்தேன்.
பூனை அல்லது புலி ஒன்றால் மரணம் எனக்கு நேரும் என்பது தெரிந்து விட்டது.
அதுவும் கேட்டி'யால்தான்.
விஷயம் தெரிந்துதான் அவள் நல்லவள் போல் வந்திருக்கிறாள் என்பது புரிந்து போனது.
விடியும் வரை விழித்திருந்து விடிந்ததும் தூங்கி போனேன்.
முற்பகல்…
கேட்டி தனக்குரிய அசைவ உணவுகளை தயாரித்து (மீன்கள்) பின் எனக்குரிய சைவ உணவுகளை சமைத்திருந்தாள்.
எனது கணவர் நீங்கள் எழுதும் கதையில் சில பகுதிகளை என்னையும் இணைந்து எழுத சொன்னார். நான் எழுதலாமா என்று அமைதியாக கேட்டாள்.
நான் எழுதும் கதையானது, செயற்கை புயலை உருவாக்கும் ஒரு வன அதிகாரியின் கனவுகளை ஓவியமாக வரையும் ஆந்திர நாயுடு ஒருவரை பற்றியது.
இப்படி கேட்டதன் மூலம், என்னிடத்தில் கேட்டி சுலபமாக சிக்கி கொண்டாள் என்றுதான் தோன்றியது.
கதையை எழுதுவது போல் அவள் யார் என்பதை அவள் எழுத்தின் மூலமாகவே கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
முதலில் அவளிடம் நான் மறுப்பதுபோல் காட்டிக்கொண்டு பின் சம்மதித்தேன்.
கதையில் பல திருப்பங்களை உருவாக்கி அதை அவள் தீர்க்கும்படி நான் பாதியில் விலகி சென்று விடுவேன்.
அவளும் எழுதினாள்.
என் முதுகில் வரையப்பட்ட பூனை மெல்ல வளர்ந்து வந்தது.
நடு முதுகில் உள்ளங்கைக்கு பாதி அளவுக்கே இருந்த பூனைக்குட்டியானது இப்போது முதுகு முழுக்க வளர்ந்து இருந்தது.
அசோக், ஒரு மந்திரவாதம் தெரிந்த ராவுத்தரை அழைத்து வந்து காட்டினான்.
ஒற்றை பூனை இது. இதன் ஜோடி இந்த வட்டாரத்தில் இந்த ஜில்லாவில் அல்லது இந்த வீட்டில் கூட இருக்கலாம் என்று சொன்னவன் பாதி மந்திரிக்கும்போதே எழுந்து கடல் பக்கமாக ஓடினான்.
அவன் பின்னே ஓடிய அசோக் அன்று முதல் காணவே இல்லை.
கதையை நாவலாக மாற்றினால் மட்டுமே என் ஆயுளை நீட்டிக்க முடியும் என்று தோன்றியது.
கேட்டி ரெஃப்ரிஜிரேட்டர் முழுக்க கடல் மீன்களை வாங்கி நிரப்பினாள்.
வீட்டுக்குள் உப்புக்காற்று சுற்றி சுற்றி வீசி கொண்டிருந்தது.
காற்று வேகமாக வீசினால் வீடு படகு போல் ஆடியது.
வாசலில் கால் வைத்தால் முழங்கால் மூழ்கும் அளவுக்கு எப்போதும் நீர் தேங்கி உலர்ந்து போகாமல் இருந்தது.
கேட்டி அவள் பாகங்களை விரைவாக எழுதினாள்.
கதைக்கும் அவள் எழுதியதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அதில் அவள் பற்றிய ரகசியம் இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று புலப்பட்டது.
எனவே அதை கவனமாக வாசித்தேன்.
ஒருமுறைக்கு சிலமுறை வாசித்தும் அது உச்சரிக்கும்போது ஏதோ மந்திரமொழி போன்றே தோன்றியது.
சில நாட்கள் இப்படியே சென்றன.
கேட்டி எழுதிய மந்திர மொழிகளை நான் என்னை அறியாமல் திரும்ப திரும்ப சொல்லி வந்தால் அதற்கு ஏதேனும் சக்தி கிடைக்கும் என்று மனதுக்குள் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.
கேட்டி எனக்கு ஆதரவாக அல்லது எதிராக இயங்குகிறாள் என்பதும் அவள் ஒற்றையாக இங்கு வரவில்லை என்பதும் புரிந்தது.
அவள் வீடெங்கும் வரைந்திருந்த பல பல பூனைகள் முன்புபோல் இல்லை.
அவற்றில் கால்கள் அல்லது வால்கள் இடம் மாறியோ திசை மாறியோ இருந்தன.
இவற்றையெல்லாம் நான் கவனித்து கொண்டே இருந்தேன்.
ஒருநாள் பால்கனியில் அமர்ந்து சுண்டலை சாப்பிட்டபடி இருவரும் பேசி கொண்டிருந்தோம்.
இந்தக்கதையை எப்போது முடிக்க போகிறீர்கள்?
அதை சொல்ல தெரியவில்லை.
ஏன்? நீங்கள் எழுதுவதுதானே அது?
ஆனால் நீயும் அதில் பல பகுதிகளை எழுதுகிறாய்….
நான் என் கணவரிடம் செல்ல வேண்டும். அதுதான் கேட்டேன்…
நீ விரும்பும்போது அவரிடம் செல்லலாம்.
நாவல் முடிந்ததும்…
ஒருவேளை, அது முடியாமல் நீண்டு வளர்ந்தால்…
அவள் பதில் சொல்லாமல் அறைக்குள் சென்றாள்.
நானும் என் அறைக்கு போனேன்.
அதிகாலையில் சில பூனைகள் கத்தும் சப்தம் கேட்டது.
கதவை திறக்க சுவரில் கேட்டி வரைந்திருந்த பூனைப்படங்கள் உயிர் கொண்டு வீடு எங்கும் பரவி இருந்தது.
அவைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று விளையாடிக்கொண்டு, சில மலங்க மலங்க விழித்துக்கொண்டு…
இது எல்லாம் நீ செய்யும் மாயம் என்றேன்.
உங்கள் கற்பனை. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாள்.
உனக்கு வால் முளைத்து உள்ளது எனக்கு தெரியும். இனியும் நீ மறைக்க வேண்டாம் என்று கோபம் கொண்டது போல் பேச…
தன் கவுனை உயர்த்தி காட்ட மெரூன் நிற உள்ளாடைதான் தெரிந்தது.
ஒரு பெண்ணை அவ்விடத்தில் தொட்டு தடவி பார்த்து உறுதி செய்து கொள்ள எனக்கு மனம் வரவில்லை.
அமைதியாக இருந்தேன்.
நான் நாளை சென்று விடுவேன். உங்களின் நாவலை விருப்பம் போல் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று சமையலறைக்குள் சென்று விட்டாள்.
நிம்மதியாக இருந்தது.
இரவு.
தூக்கம் வரவில்லை. அவள் போவது நிம்மதிதான் என்றாலும் அதன் பிறகான பிரிவு மற்றும் தனிமை குறித்து சஞ்சலம் கூடியது.
யோசித்துக்கொண்டே இருந்தேன்.
குளிர் ஓடோடி வந்தது.
கடல் காற்றும் பனிக்காற்றும் பின்னி இழைந்து வந்த குளிர்.
பின் கதவு திறந்திருந்தது.
சரியாய் பூட்டினோமே என்று நினைவை சரிபார்த்து கொண்டே நான் எழுந்து அமர்ந்தேன்.
பெரிய கரிய நிழல் ஒன்று அசைந்தது.
குழப்பமும் அதிருப்தியும் மனதை பிசைய அதுவே பயமாக மாறி கால்கள் பின்ன அமர்ந்திருந்தேன்.
சில நொடிகள் செல்ல அப்படியொரு உறுமலை நான் கேட்டதே இல்லை.
நான் தவிடுபொடியாய் உதிர்ந்து போனேன்.
என் வாய் இறுகி மூடியது.
இறுதியில் நான் எதிர்பார்த்த புலி வந்து விட்டது.
ஃப்ரிட்ஜில் இருந்த மீன்களின் வாடை அதை ஈர்த்தது.
கேட்டி மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.
என்னை ஒருமுறை பார்த்துவிட்டு அவள் புலியை நோக்கி சென்றாள்.
மீன்களை ஒரு பெரிய தட்டில் வைத்து அதனிடம் நீட்டினாள்.
ஆறடிக்கும் மேல் வளர்ந்த புலி அது.
கேட்டி என்னை சுட்டிக்காட்டி அவர்தான் என் கணவர் என்றாள்.
என் காதுகள் கூர்மையாக வளர்ந்து என் முதுகுக்கு கீழே அருவெறுப்பு வருமளவு ஒரு வாலும் வளர்ந்தது.
கை கால் நகங்கள் கூர்மையானது.
மெல்ல மெல்ல நான் ஒரு பூனையாக மாற தொடங்கினேன்.
மொத்த காற்றுக்கும் இணையாக என் வீடு படகு போல் ஆடி ஆடி கடலை நோக்கி நகர்ந்து சென்றது.
இது கனவா என நான் நினைக்கும்போது இல்லை, இது உண்மைதான் என சொல்லி கொண்டேன்.
கேட்டி அந்த புலியிடம் வளர்ப்பு நாயுடன் பேசுவது போல் பேசினாள்.
மேலும், எழுத்தாளரான என் கணவர் ஒரு வன அதிகாரியும் ஆவார்.
அவரால் நினைத்த பொழுதில் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் பெரிய செயற்கை புயலை உருவாக்கவும் முடியும்…