எழில் மிகு சேலம்
எழில்மிகு சேலம்.
##############
மலைகளே மதில்களாய் மாங்கனி நகரமாய்
கலைகளே கோயிலாய்க் காவிரித் தேக்கமாய்
விலையிலா இரும்பொடு வேண்டிய கனிமமும்
மலையெனக் குவிந்திடும் மாநகர் அல்லவோ!
குறிஞ்சியும் முல்லையும் குறைவிலா மருதமும்
நிறைந்ததோர் மண்வளம் நீர்வளம் கொண்டவூர்
அறிஞரும் சித்தரும் அரும்பெரும் தலைவரும்
வறியவர்க் கீந்திடும் நல்லவர் நாடுமூர்!
வள்ளல் அதியனும் வல்வில் ஓரியும்
கொள்ளைப் புகழொடு கொடையினில் சிறந்ததும்
துள்ளும் காளையர் துவன்றிடா மங்கையர்
வெள்ளை மனதினைக் கற்றிடும் மண்ணிதே !
உழைப்பிலே உறுதியும் உளங்களோ இளகியும்
மழையிலும் வெயிலிலும் மாண்பொடு நிமிர்பவர்
பிழைப்பதும் தழைப்பதும்
பிழையிலாப் பண்பொடு
மழையெனக் கனிமொழி மொழிவதும் இவர்களே!
வளங்களில் இல்லையே வான்புகழ்ப் பெருமைகள்
களத்தினில் என்றுமே கலங்கிடா மானுடர்
அளவிலாக் காலமாய் அன்பொடும் இசைவொடும்
வளமார் பெருமையில் வாழ்வதும் சேலமே !
-யாதுமறியான்.