எது மிருகம்
இருள்சூழ்ந்த பனிவனம் - தடம்
தொலைத்த தலைவி தனியலாய்
தளிர்மனம் விதிர்க்க விரைந்தாள்
நடுநிசியில் நாற்புறமும் கண்வைத்து.....
தடுமாறினாள் காணாமற் - தடம்,
பிறந்தது இனம்புரியாவலி இதயத்தில்
கனற்கண் கொந்தளித்து காய்ந்தது
மனம் மாற்றம் புரியாது....
உறுதி பற்றி திடத்துடன் - தடம்
பதித்தாள் விட்டுவிலக வனம்,
இடித்துரைத்தது இதயம் தன்
இனம்காணாமற் எவ்வாறு விலக?
முத்துகளாய் வியர்வை முகநிலவில்
சுரக்க சுறுசுறுபான பூமேணியள்
நடையழகை கண் டுணர்ந்த
வழிப்போக்கன் விழி மின்ன
மதிமயங்கித் தன் - தடம்
மாற்றினான் தலைவி வழியில்,
தொடரும் கரிய உருவில்
கதிகலங்கி காணு தற்கறிய
இறைவனை அழைத்தாள் - தடம்
மறந்தவள், தன்னுறைவில் வேற்று
இனம்கண்ட பால்வண்ண பனிக்கரடி தணல் விழியால் தடுமாற்ற....
உறைந்த அகபயத்தில் - தடம்
சிதறினான் காமுகன் காணாமல்,
கரடியை கண்ணுற்ற தலைவி
இறுதிவழி வேண்டி கண்ணீருடன்....
இதம்தேக்கி உறுத்து நங்கை
விழியினில் மகத்தான மனிதம்
கடத்தியது மிருகம் மிருதுவாக,
கண்ணீர் மல்கநின்றாள் பாவை....
பளிங்குக் கண்களால் பாவையை
யொருபார்வை பார்த்து பண்புடன்
வழி காட்டியது பனிக்கரடி,
பாவை மனதினில் தர்க்கம்.....
மனிதம் பழகிய மிருகம் மனிதனா?
மனிதம் மறந்த மனிதன் மிருகமா ?
மனிதன் என்றழைக்கப் படுவது
புறத்தோற்றதையா அல்ல அகத்தையா?
கவிபாரதீ ✍️