கனவின் இனிய நொடி

கனவின் இனிய நொடி
**************************
கனவு நதியிலொரு கவிதை படகுவர
மனமு மதிலமர மதியி ளொளிபரவ
தினமு மமுதமதை யருளு மினியவெளி திரிவோமே
*
வனமு மருகிலிலை வதன முருகிவிட
கனலு மதிகமிலை கரிய முகிலுமிலை
புனலி லலையுமிலை புதிய
திசையிலுல விடுவோமே
*
இனமு சனமுமென இடர விடவுமென
சினமொ டெவருமிலை சிறிய தவறுமிலை
தனமு பணமுமிலை தனிமை இனிமையென விரிவோமே
*
வினவ மொழியுமிலை விரக நரகமிலை
எனது முனதுமற இதய மிணையுநிலை
முனக லொலியுமிலை முதுமை இளமையிலை யறிவோமே
*
தினவு எதுவுமிலை திருட ருலவலிலை
தனது நிலையிலிரு தலைக ளகலவிலை
சனன மரணமிலை சதியு பதியுமென உறைவோமே
*
உனது விடுமுறையை எனது விழியிலென
எனது விடுமுறையை உனது விழியிலென
மனதி னினியவழி மகிழ வுலவிவரு மழகோடே
*
அனவ ரதமுமெமை அழகி தழுளசுவை
மனமி னிதுறசுவை மதும லரெனநனை
எனவொ ருவிதியதை எழுதி யகனவலை விழியோடே
*
அனலு மெழுகுமென அழகு உருகிவிழ
மனதி னருவிகனி மதுர மொழுகிவர
கனவி னினியநொடி கவலை மறையுமதை விடுவோமோ?
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Sep-23, 1:40 am)
பார்வை : 104

மேலே