நன்றுடை யானைத் தீயதி லானை - திருச்சிராப்பள்ளி, முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

கலித்துறை
(விளம் மா விளம் மா புளிமாங்காய்)

நன்றுடை யானைத் தீயதி லானை நரைவெள்ளே
றொன்றுடை யானை யுமையொரு பாக முடையானைச்
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறவென் னுள்ளங் குளிரும்மே! 1

.- 098 திருச்சிராப்பள்ளி, முதல் திருமுறை,
திருஞானசம்பந்தர் தேவாரம்

பொழிப்புரை:

நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை,

மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை,

அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை,

சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.

எழுதியவர் : திருஞானசம்பந்தர் (9-Oct-23, 6:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே