தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!
கதிரவனின் குட்டிகளை மாலைப் போதில் - விளக்கில்
முதிர்நெய்யில் ஊறுகருங் கண்ணிப் பஞ்சின்
திரியதனில் இறங்கிவரத் திரளும் இருளின் - கருப்புத்
திரைகிழித்து ஒளிபெருகும் தீபத் திருநாள்!!
புதியஉடை உடல்தழுவ உள்ளம் பொங்க - கண்கள்
பூக்களென விரிந்தாடச் சிரிப்புச் சிதறும்!!
மதுமலர்கள் நறுமணமும் வாடா நிறமும் - மிதக்கும்
மகரந்தப் பொடிமணமும் எங்கும் நிறையும்!!
ததும்புமொளிப் பொற்சுடர்கள் வீசும் ஒளியில் - யாவும்
தங்கத்தின் நிறமூறி ஒளிரும் இல்லம்!!
சிறுமியரும் உடனாடும் சிறுவர் குழுவும் - கையில்
சிதறுமொளி மத்தாப்பாய்ச் சிரித்துக் களிக்கும்!!
நறுநெய்யால் பலகாரம் நாவில் கரையும் - இனிமை
நனைந்துவழி யும்குரல்கள் நிறையும் வீட்டில்!!
அலைமகளீன் நிறையருளால் மகிழ்வு பொங்கும் - வெள்ளைக்
கலைமகளின் திகழுமருள் அறிவில் திரளும்!!
மலைமகளின் மாசற்ற வீரம் செறியும் - மக்கள்
மகிழ்ச்சிபெரு கிக்களிக்கும் தீபத் திருநாள்!!
மலைபோலக் குவிசெல்வம் முகிலில் சிந்தும் - மண்ணில்
மங்காமல் தங்கும்தீ பாவளி வாழ்த்து!!
- - - - "சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா"