028 திருக்கருவூரானிலை, இரண்டாம் திருமுறை - பாடல் 2 - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(தேமா கூவிளம் தேமா கூவிளம்)

நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்த மன்பரே! 2

பொழிப்புரை:

நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத் தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர்.

குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார்களுக்கு அன்பர்.

குறிப்புரை:

நீதியார் - நீதியே வடிவான சிவபெருமான்.

நினைந்து ஆய நான்மறை ஓதியார் - எண்ணி ஆராய்ந்த நான்கு மறைகளை ஓதுவார்,

கூடலார் - கூடுவார்; குழைக்காதினார் - குழையணிந்த திருச்செவியை உடையவர்.

குழை தோட்டின் வேறானது; இதனைக் `குழையும் சுருள்தோடும்` என்ற திருவாசகத்தானறிக.

அடியார்தம் அன்பர் - அடியார்களுக்கு அன்பராயிருப்பர்.

எழுதியவர் : திருஞான சம்பந்தர் (7-Nov-23, 11:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே