நீயே துணை

கைக் குழந்தை அழுத வேளை
கடைத் தெருவோ திறக்கவில்லை
காய்ச்சியிருந்த பாலும் அங்கு
கால் இடறி உதவவில்லை
எட்டிப் பார்த்து உதவி செய்ய
எதிர் வீட்டில் யாருமில்லை
அழும் குழந்தை சத்தங்கேட்டு
அடுத்த முயற்சி செய்யும் வேளை
காந்தா நீயே துணை
கடம்பா நீயே துணை

தேர்வெழுதச் செல்லும் வேளை
தேங்கி நின்ற சேற்றடித்து
உடை மாற்றும் வேளை கடைசி
பேருந்ததுவும் கிளம்பி விட
பையில் இருந்த பணம் யாவும்
பர்சுடனே களவு போக
பாதி ஓடி மூச்சு வங்கி
மீதி தூரம் பார்க்கும் நேரம்
முருகா நீயே துணை
குமரா நீயே துணை

நள்ளிரவு பிறந்த வேளை
நாய்கள் யாவும் கூச்சலிட
தட்டும் கதவு ஓசை கேட்டு
தயக்கத்துடனே நடந்து வந்து
கொட்டும் மழை வெள்ளம் யாவும்
கோழை மனத் தாற்றில் பாய
கொள்ளையனை கனவில் கண்டு
கோவென்று விழித்த நேரம்
கந்தா நீயே துணை
கடம்பா நீயே துணை

ஏர் உழுது களை எடுத்து
எண்பது நாள் காத்திருந்து
அறுவடைக்கு நேரம் பார்த்து
அடுத்த நாளும் குறித்துவிட
மும்மாரி பெய்த மழை
முழு இரவில் பெய்துவிட
நெல்மணிகள் புதைந்த மண்ணை
ஏக்கத்தோடு பார்க்கும் நேரம்
கந்தா நீயே துணை
கடம்பா நீயே துணை

பொறியாளன் கைகள் எங்கும்
பொரிபொரியாய் மாறிவிட
ஆயிரம் விஞ்ஞானிகள் கை
அகழ்வாய்வில் இறங்கி செய்த
இஸ்ரோவின் ராக்கெட் ஒன்று
இன்று காலை ஏவியபின்
கடைசி நிமிட பழுதுபட்டு
கைமீறிப் போன வேளை
கந்தா நீயே துணை
கடம்பா நீயே துணை

நான்காண்டு தவம் செய்து
நானூறு வீரர் மாற்றி
யுத்த களம் ஒன்றில் பல
யுக்திகளும் செய்து காட்டி
இந்தியாவின் மக்களெங்கும்
இன்பநிலை அடையும் போது
'கோஹ்லி அவுட்' என்று நாங்கள்
கோட்டை விட்ட சமயத்திலே
கந்தா நீயே துணை
கடம்பா நீயே துணை

காவிரியில் தண்ணீர் கேட்டு
கால் வயிறு விரதமிருந்து
நீதிமன்றம் பல நடந்து
நீதி கேட்டுப் போராடி
வர்தாப் புயல் மிக்ஜங் புயல்
வரமாய் வரும் தண்ணீரை
வசை பாடி குறை சொல்லி
கடல் அனுப்பும் உள்ளங்களுக்கு
கந்தா நீயே துணை
கடம்பா நீயே துணை

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (10-Dec-23, 10:48 am)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : neeye thunai
பார்வை : 234

மேலே