வரி
****
வரிக்கட்டி வாடும் வருமான மில்லார்
சிரிப்பும் கடனென்றே செப்பு
*
செப்பும் வகைக்கிங்கே சீர்கேடே உண்டெனில்
எப்படி வாழ்வதா மிங்கு
*
இங்கே எமக்கென்று எங்கும் கடன்வாங்கித்
தொங்கும் நிலைகிட்டார் தூக்கு
*
தூக்க முடியா தொடர்கட னால்மக்கள்
தாக்கப் படுவதாம் தப்பு
*
தப்புக் குறியவர் தப்பிப் பிழைத்திருக்கத்
தப்பிழைக் கார்க்கே தவிப்பு
*
தவித்திடும் வாழ்வைத் தருவித்து வைத்துக்
குவிக்கும் வரித்தேள் கொடுக்கு
*
கொடுக்கின்றிக் கொட்டிக் குடிமக்கள் நெஞ்சில்
வடுவேற்றத் தானே வரி
*
வரிப்பணத் தாலே வருமானம் கூட்டி விரிவாக்க லாமோ விதி
*
விதியினை நொந்து விடிகின்ற வாழ்வில்
புதிதாய் வரியோடு போர்
*
போர்முடிந்த நாட்டிலக்கப் போராகி வாட்டியுயிர்
வாரிருக்கிக் கொல்லும் வரி
*
மெய்யன் நடராஜ்