நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் நா-நயம்

நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
தமிழ் மொழியில் இந்த ‘நாணயம்’ என்னும் வார்த்தைக்கு பல் வேறு பொருள்களை நமக்கு தருகிறது
நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" ஆகும். “பணம்” என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும். நாணயம் என்பது நாணயத்தாள், உலோக நாணயம் (நாணயக் குற்றி) என்னும் இரண்டு வடிவங்களில் உள்ளன.
இரண்டாவதாக “நேர்மை” என்று குறிப்பிடுகிறது
இதனுடைய (சொல் பொருளாக) கீழ்கண்டவைகளை தருகிறது
1. இனிமை
2. நயப்பாடு, சிறப்பு
3. கொள்கை,நியதி
4. அன்பு,பரிவு
5. நன்மை
6. அருள்
நாணயம் — “நா-நயம்”

பெரும் தமிழ் அறிஞர் கி.அ.பெ.விசுவநாதம் அவர் இப்படி கூறுகிறார்.
இனிய சொற்களைச் சொல்வது. நாம் 5 ரூபாய் விலை சொன்னால் கேட்கிறவன் 3 ரூபாய்க்குக் கேட்பான். அப்படிக் கேட்பவனிடம் கடிந்து கொள்ளாமல், முகம் சுளிக்காமல், “இப்போது உங்களுக்குப் பருவம் தெரியாது. இதுதான் குறைந்த விலை. இன்னும் நாலு கடைகளில் விலையைக் கேட்டுப் பாருங்கள். இதைவிட அதிக விலை கூறுவார்கள். சடைசியில் நீங்கள் திரும்பி இங்குதான் வர வேண்டியிருக்கும்” என்று சிரித்த முகத்தோடு, இனிய சொற்களால் சொல்லியனுப்ப வேண்டும் தடித்த சொற்களையும் கெட்ட சொற்களையும் சொல்வது நா-நயமாகாது. நாக்கு தீய சொற்களைச் சொல்லப் படைக்கப்பட்டதல்ல என்பதை மற்றவர்களைவிட வியாபாரிகள் உணர்வது நல்லது.
திரு.முத்து ஆதவன் வி. காளிமுத்து அவர்கள் “எழுத்து” தளத்தில் எழுதியிருந்த கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
“நா நயம்” உள்ளவனிடம் நாணயம் இருக்கும், அதே போல் “நாணயம்” உள்ளவனிடம் நா நயம் இருக்கும்.
இந்த இரண்டு சொற்களுக்கும் உள்ள ஒற்றை சொல்தான் “நேர்மை” என்று குறிப்பிடுகிறார். இவை சொல்லி கொடுத்து வருவதல்ல, இயல்பாக வரும் குணம் எனவும் குறிப்பிடுகிறார்.
இவைகள் மேற்கொண்ட விளக்கங்கள் என்றாலும் இந்த கட்டுரை “நா நயம்” என்பதை “வாக்கு சுத்தம்” என்று குறிப்பிடுவதற்காக “நகர்ந்து கொண்டிருக்கும் நாணயம்” என்று குறிப்பிடுகிறது.
இன்றைக்கு ‘வாக்கு’ என்பதற்கு கூட அர்த்தம் தெரியாத அளவில் மக்களின் போக்கு இருக்கிறது. இருபது முப்பது வருடங்களுக்கு முன் ஒரு மனிதனின் வாழ்க்கை சமுதாயத்தில் அவனது ‘வாக்கு சுத்தத்தில்’ வைத்து அவனை அடையாளம் காணப்பட்டது.
“அவரா அவரு சொன்னா சொன்னதுதான்” “வார்த்தை தவறாத ஆள்” இப்படி பலவாறாக அவர்களை பற்றி பேசிக்கொள்வதை நாம் கேட்டிருக்கலாம்.(அதாவது வயது நாற்பதுக்கு மேற்பட்டவர்கள்.)
இன்றைய தலைமுறை அப்படி ஒன்று இருப்பதாக கூட கவலை கொள்வதில்லை. காரணம் அவர்களது குற்றமல்ல, இன்றைய வாழ்க்கை என்பது அவசரகதியில் ஓடி கொண்டிருப்பது. இன்றைய நாள் சச்சரவின்றி ஓடினால் போதும் என்னும் மன நிலையில் அவர்களால் எதையும் நம்பி ‘வாக்கு’ கொடுக்க முடிவதில்லை.
பொதுவாகவே ‘வாக்கு சுத்தம்’ என்பது பணம் கொடுக்கல் வாங்கலிலும், வணிக பயன்பாட்டிலும் அதிகமாக காணப்படுகிறது. இன்றும் நிறைய சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் ‘ வெறும் வாக்கை”மட்டும் நம்பி பொருட்களை வியாபாரமாக்கி கொள்வதும் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் எந்த ஓப்பந்த கையெழுத்தும் போட்டு கொள்ளாமல் பொருட்கள் தயார் செய்யும் இடத்திலிருந்து ஒரோரு இடமாக அந்த பொருட்கள் இறக்கப்பட்டு கடைசி சில்லறை வணிக கடைகள் வரை வந்து நுகர்வோரை சென்று அடையும் நிகழ்ச்சியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இவைகள் எல்லாமே ஒவ்வொரு இடத்தின் ‘வாய்மை’ (வாய் சொல்) படித்தான் பயணித்து கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல “இந்த சரக்கு நல்லாயிருக்கும்” என்று வியாபாரிகள் நம்பும் ஒருவர் (அவர் முகவராகவும் இருக்கலாம்) அவரின் வார்த்தைக்காக இறக்குமதி செய்து கொள்வதும் உண்டு.
இன்று கார்ப்பரேட் வணிகம் உள்ளே நுழைந்த பின்னால் அந்த ‘வாக்கு’ என்னும் சொல் மெல்ல மெல்ல மறைந்து “அக்ரிமெண்ட்” அதாவது ஒப்பந்தம் என்னும் அளவில் நடை பெற்று கொண்டும் இருக்கிறது.
இந்த ஒப்பந்த சரத்து மிகுந்த முன்னெச்சரிக்கையாக போடப்பட்டு தயாரிப்பாளர் விற்பவர், இருவரும் தங்களின் நலன் பாதிக்காதவாறு செய்து கொள்கின்றனர்.
கடைசியில் “வாங்குபவர்” என்னும் நுகர்வோர் இந்த ஒப்பந்தத்தினால் சிரமப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அடுத்ததாக பொது வாழ்க்கையில் நாம் ‘வாக்கு’ என்னும் ஒழுங்கை கடைபிடிக்கிறோமா என்று கவனித்தால் அது மிக குறைவாகத்தான் இருக்கிறது.
நம் வீட்டிலேயே நம்மால் இதை கடை பிடிக்க முடிவதில்லை. நாம் பெற்றொருக்கு கொடுக்கும் வாக்கும் சரி, நமக்கு துணையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடமும், அல்லது நம்முடைய குழந்தைகளிடம் கூட நம்மால் நாம் சொல்லும் வாக்கை காப்பாற்ற முடிவதில்லை.
இதற்காக நம்மை ஒழுக்கம் தவறிவிட்டதாகவோ, அல்லது நாணயம் தவறியவர்களாகவோ எப்படி சொல்ல முடியும்? நம்முடைய வாழ்க்கை சிக்கல்கள் நம்மை பின்னி பிணைந்திருக்கும்போது நாம் நம் பெற்றோரிடம் சொல்லும் வார்த்தைகளை பின் பற்ற முடியாமல் போகலாம், அது மனைவியாக இருந்தாலும், கணவனாக இருந்தாலும், ஏன் நம்முடைய குழந்தைகள் நம்மிடம் சொல்லும் வாக்குகளாக இருந்தாலும் சரி ஏதோவொரு கட்டத்தில் மாறித்தான் போகிறது. இதையும் நாம் ஏற்று கொள்ள பழகிவிட்டோம் இன்றைய அவசர வாழ்க்கையில்.
இதே சூழ்நிலைகள்தான் நட்பு, அக்கம்பக்கம், மற்றும் உறவுகளிடத்தும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் யாராக இருந்தாலும் ஒரு முறை அவர் சொல்லும்போது “உறுதி செய்து”கொள்வதும், அப்படி தவறினால் மாற்று என்ன என்று உறுதிப்படுத்தி கொண்டும் கடந்து போய்க்கொண்டு இருக்கிறோம்.
இருந்தாலும் இதனால் நிறைய பேர் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகி துன்பபட்டவர்கள் உண்டு ‘சொத்துக்களை இழந்து’ நடுத்தெருவுக்கு அவர்களும், அவர்கள் குடும்பங்களும் வந்ததும் உண்டு.
அரசியல்
ஒரு முறை முன்னால் நகைச்சுவை நடிகர் ‘நாகேஷ்’ மேடையில் ஒரு முறை இப்படி பேசியதாக படித்த ஞாபகம் ‘மைக்குக்கு’ மட்டும் உயிர் இருந்து அது அரசியல்வாதி தினம் தினம் பேசும் பொய்யை கேட்டு கொண்டிருந்தால், அது நாளடைவில் ‘இறுதி நிலைக்கே’ (மரணம்) போய் விடும்.
இப்படித்தான் நாம் பெரும் தலைவராக நினைப்பவர்கள் கூட அன்றாடம் சொல்லும் பொய்களை கேட்டு பழகி விட்டோம். ஒரு காலத்தில் “மிகபெரும் தலைவராக மதிப்பவர்” ஒரு வார்த்தை மேடையிலோ அல்லது பொது வெளியிலோ பேசியிருந்தால் அதை உண்மையாகவே நம்பும் மக்கள் எத்தனை பேர் இருந்தார்கள். ஆனால் இன்று…!
ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள், எல்லாம் முடிந்த பின்னால் அதை மறந்து அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் குணம், இவைகள் எல்லாம் என்ன சொல்கிறது?
“வாக்கு” என்னும் சொல் ஒரு மனிதனின் வாயில் இருந்து வந்த காலம் மெல்ல மெல்ல மறைந்து “எதுவா இருந்தாலும் “அக்ரிமெண்ட் (ஓப்பந்தம்) போட்டுக்கறது பாதுகாப்பு என்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி போட்டும் பாதிப்புக்கள் அடைந்து கொண்டும் இருப்பவர்கள் பல பேர். என்றாலும் என்ன செய்வது? வாழ்க்கை சக்கரத்தில் இன்னும் பழைய வார்த்தையான “வாக்கு சுத்தம்” என்பதை நம்ப முடியுமா? இந்த கேள்விதான் எழுகிறது.
அரசியல்வாதிகளின் இத்தைய வாக்குறுதி பேச்சுக்கள் கூட நகைச்சுவை பேச்சுக்களாக கேட்டு கடந்து போய்க்கொண்டிருக்கும் காலங்கள்தான் தற்போது நடைபெற்று வருகிறது. அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவரென்றாலும்..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Feb-24, 12:11 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே