இந்தியாவின் எதிர்கால மன்னர்கள்

நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்

நாங்கள்
சரஸ்வதி
சகாயத்தால்
பட்டங்கள் பெற்றோம்
லட்சுமி எங்களை
லட்சியம் செய்யாததால்
மணிமேகலையைத்
தேடியலைகின்றோம்!

நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்

நாங்கள்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தொலைத்துவிட்டு அல்ல
வாழ்க்கை தொலையாதிருக்க
வேலை தேடிக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்

நாங்கள்
பாக்கெட் மணிக்கு
பல் இளித்தும்
அசடுவழிந்தும்
அவமானப்படும்
அவதாரப்புருஷர்கள்
விண்ணப்பச்செலவுக்கே
அப்பாவிடம்
விண்ணப்பம் செய்து
வேண்டிநிற்கும்
வேடதாரிகள்

நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்

நாங்கள்
மாண்புமிகு அமைச்சர்களால்
மறுதலிக்கப்பட்டவர்கள்
லஞ்சப்பேர்வழிகளால்
வஞ்சிக்கப்பட்டவர்கள்

நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்

நாங்கள்
பாவப்பட்ட ஜென்மங்கள்
வேலைவாய்ப்பு அலுவலகத்தாலும்
வெறுத்தொதுக்கப்பட்டவர்கள்

நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்

நாங்கள்
வித்தியாசமானவர்கள்
ஊராரின் பார்வைக்கு
நாங்கள் வித்தியாசமானவர்கள்
ஒரு வேலையைத்தேடியே
உருமாறிப்போனவர்கள்
தளர்ந்த நடை
உலர்ந்த உதடுகள்
கையில் சான்றிதழ்
கண்ணில் சோகம்
நாங்கள் வித்தியாசமானவர்கள்தான்

நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்

நாங்கள்
இளைஞர்கள்
இந்தியாவின்
எதிர்கால மன்னர்கள்
ஆனால் இப்போது....,

நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்
-- வெ.பசுபதி ரங்கன்

எழுதியவர் : -- வெ.பசுபதி ரங்கன் (25-Mar-24, 6:59 pm)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 56

மேலே