தபால் தினக்கவிதை

📜📜📜📜📜📜📜📜📜📜📜

*உலக தபால் தினம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

📜📜📜📜📜📜📜📜📜📜📜


இன்றும்
கடிதம் எழுதும் பழக்கம்
இருக்கிறது......
கட்டுரை நோட்டில் மட்டும்....

உறவுகளை
இணைக்கும்
பாலமாக இருந்தது...
இன்று
கைப்பேசி அதிர்வுகளால்
இடிந்து நொறுங்கிக் கிடக்கிறது...

தபால் பெட்டியில்
இன்று
வெறும்
காற்று மட்டுமல்ல.....
கண்ணீர் கவலை
அன்பு பாசம்
பாராட்டு ஆறுதல்
அழைப்பு நலம்
நன்றி நட்பு
இன்பம் துன்பம்
மகிழ்ச்சி வீழ்ச்சி
இவைகளின் கடந்த கால நினைவுகளும் சேர்ந்து
நிரம்பியுள்ளது.....!

கடிதமே !
நீ வார்த்தைகளை மட்டுமா
சுமந்து வந்தாய் ?
எழுதியவரின்
ஸ்பரிசத்தையும்
சேர்த்து அல்லவா தந்தாய் !

நாங்கள் என்று
உன்னிடம்
காகிதத்தின் வாசனையைக்
கண்டிருக்கிறோம்...?
அம்மா எழுதியது என்றால்
பால் வாசனை.....
அப்பா எழுதியது என்றால்
வியர்வை வாசனை....
நட்பு எழுதியது என்றால்
நினைவுகள் வாசனை...
காதலர் எழுதியது என்றால்
இதயத்தின் வாசனை....
உடன்பிறப்புகள்
எழுதியது என்றால்
பாசத்தின் வாசனையைத் தானே
நாங்கள்
உணர்ந்திருக்கிறோம்....

ஐயோ !
அந்த வாசனைகளை எல்லாம்
மீண்டும் என்று
உணரப் போகிறோமோ ..?

கார்மேகக்கடிதத்தை கண்டவுடன்
மனமயில் தோகை
விரித்தாடும்
அந்த அழகை
எந்தக் கவிஞனாலும்
வர்ணித்து எழுதத்தான்
முடியுமோ ....?

கடிதமே !
கையில்லாமலேயே
கட்டியணைத்து
ஆறுதல் சொன்னாயே !
அள்ளி எடுத்து கொஞ்சினாயே!
வாரி எடுத்து பாராட்டினாயே!
மார்போடு அணைத்து
தூங்க வைத்தாயே!
ஐயோ! சாமி ....அதை
மறக்க முடியலையே !
மனம் தான் தாங்கலையே !

நீ கொடுக்கும் ஸ்பரிசத்திற்கே
என் மனம்
தாயைப் பிரிந்தக் குழந்தையாய்
தவியாய் தவிக்கிறதே..!
சாமி ....நான் கொடுக்கும்
முத்தத்திற்கு
நீ எப்படி எல்லாம்
துடியாய் துடித்திருப்பாயோ !
நான் எப்படி சொல்வேன்?
நான் என்ன செய்வேன்?

அறிவியிலே
நீ அழிந்த போ...
இதயம் இல்லாத நீ
ஒளிந்து போ.....

மௌனத்தை
மொழிபெயர்க்க
முடியாது என்று
இன்றைய தலைமுறைகள் சொல்கிறார்கள்....
ஆனால்
உன்னால் முடியும் என்பதை
அவர்கள் அறிந்திருக்க
வாய்ப்பில்லை.....!!!

கடிதமே !
நீ கையில் கிடைத்தவுடன்
பிரசவத்தின் போது
வெளியே தவியாய் தவிக்கும்
ஒரு தந்தையின்
தவிப்பை......
நான் மீண்டும்
எப்போது
அனுபவிப்பேனோ .....?

ஆனந்தக் கண்ணீர் ஆனாலும்
அழுகை கண்ணீரானாலும்
பெற்றுக்கொள்ள
உன்னிடம் உள்ள
ஒரு சில எழுத்துக்களை
அழித்து
இடம் தருவாயே !
என் மனப்பாரம் குறைவதற்கு ...
அதை நான் எப்படி மறப்பேன்?
நான் எப்படி புதைப்பேன்?
இன்றும் மனபாரம் இருக்கிறது
கண்ணீர் இருக்கிறது
சாமி ! நீ இல்லையே....!

நீ இன்னும்
என்னுடன் இருக்கிறாய்
பொக்கிஷமாய்....
அவ்வப்போது
உன்னை
தொட்டு தொட்டு பார்த்து
என் மனிதம்
தொலைந்து விடாமல்
பார்த்துக் கொள்கிறேன்....
கவலைப்படாதே !
உன்னோடு
நான் இல்லாமல் போனாலும்
என்னோடு
உன் நினைவுகள்
என்றும் இருக்கும் பிரியாமல்....!!!




*கவிதைரசிகன*

📜📜📜📜📜📜📜📜📜📜📜

எழுதியவர் : கவிதை ரசிகன் (1-Sep-24, 9:02 pm)
பார்வை : 27

மேலே