அம்பேத்கர் நினைவு தினக் கவிதை
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அம்பேத்கர்*
*நினைவு தினக் கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பாறைக்கு அடியில்
அம்பேத்கர் விதை
சிக்கியிருந்தாலும்....
படிப்பு வேரால்
பாறையைப்
பிளந்து கொண்டு
ஆலமரமாய்
முளைப்பார் என்று
அன்று யாரும்
எதிர்பார்த்திருக்க
மாட்டார்கள்.....
சாது மிரண்டால்
காடு கொள்ளாது என்பார்கள்
அம்பேத்கர் மிரண்டார்
இந்தியாவே
கொள்ளவில்லை.....
தீண்டாமை உளியும்
சாதி சுத்திலும்
துணிவு சிற்பியும்
சாதாரண பீம்ராவ்வை
அசாதாரணமான
அம்பேத்கராக
வடித்து கொடுத்தது.....
பள்ளியிலும்
கல்லூரியிலும் பல்கலைக்கழகங்களிலும்
கற்றுக்கொண்டதை விட....
" வீதியில் "
கற்றுக்கொண்டது தான்
இவரை
ஒரு புரட்சியாளராக
மாற்றியது......
பள்ளிக்கு வெளியே
கோணிப்பையில் அமர்ந்து
கல்வி கற்ற
குழந்தைகளை
பள்ளிக்குள்
அழைத்துச் சென்று
சக மாணவர்களோடு
அமரவைத்தது
அம்பேத்கரின் கரம் தானே...!
மாட்டுத் தோலை உரித்துப்
பறையில் கட்டி மட்டுமல்ல...
பறையர் என்ற பெயரில்
கொடுமைப்படுத்துவோரின்
தோலை உரித்து
பறையில் கட்டி அடிக்கவும்
தயங்க மாட்டோம் என்று
சொல்ல வைத்தது
அம்பேத்கரின் குரல் தானே....!
தலித் நிழல் பட்டாலே
தீட்டு என்று
எந்த சட்டம் சொன்னதோ....
இரவு
ஒன்பது மணிக்கு மேல்
தெருவில்
நடக்கக் கூடாது என்று
எந்த சட்டம் சொன்னதோ.....
காலில்
செருப்பு போட்டு
நடக்க கூடாது என்று
எந்த சட்டம் சொன்னதோ.....
அந்தச் சட்டத்தின்
தலையெழுத்தையே
மாற்றி......
மாலையிட்டு
மகுடம் சூட்டி
சிம்மாசனத்தில்
அமர வைத்தது
தலித் மக்களின்
பிரதிநிதியான
டாக்டர் அம்பேத்கர் தானே...!
படிப்பால்
என்ன செய்யமுடியும்?என்று
கேட்பவர்களுக்கும்
கேட்கின்றவர்களுக்கும்
கேட்கப்
போகின்றவர்களுக்கும்
அம்பேத்காரின் வரலாறு
ஒரு சாட்டையடி அல்ல
ஓராயிரம் சவுக்கடி......!!
பொது நீர் நிலைகளில்
நீர் எடுக்கவும்
பொது ஆலயங்களில்
நுழையவும்
உரிமையை
பெற்றுத் தந்தது
அம்பேத்காரின்
போராட்டங்கள் தானே....!!
தலித்துகள்
செருப்பு போட்டு
நடக்க கூடாது என்று
தடை போட்டவர்களின்
வம்சத்தில் வந்தவர்கள் எல்லாம்
இன்று
தொட்டு கும்பிட்டு விட்டுச்
செல்கின்றனர்
அம்பேத்கரின்
ஃபூட்ஸ் போட்ட கால்களை....!!
காற்றும்
ஒளியும்
நுழைய முடியாத
இடத்தில் கூட
அம்பேத்கரின்
பேரும் புகழும்
நுழைந்திருக்கிறது அல்லவா?
நியமாகப் பார்த்தால்
தலித் பிரிவினர்கள்
இல்லந்தோறும்
வைத்து
வணங்க வேண்டியது
ஆண்டவன் படம் மட்டுமல்ல
அம்பேத்காரின் படத்தையும்
சேர்த்துதான்....
அம்பேத்கர் கண்ட
கனவுகள் எல்லாம்
முற்றிலும்
நிறைவேறி விடவில்லை....
மீதியை நிறைவேற்றிட
மீண்டும்
இன்னொரு அம்பேத்கார்
எப்பொழுது பிறப்பாரோ...?
*கவிதை ரசிகன் குமரேசன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥