நீங்கள் துயிலும் தாய்மடி நலமா
கார்த்திகை பூக்களே நலமா?
கல்லறை தெய்வங்களே சுகமா?
உறவுகள் நலமா?
நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?
தூயவர்ளே நீங்கள் துயின்ற
துயிலும் இல்லங்கள் இல்லையே...!!!
எங்கே போனீர்கள்?
எங்கள் மனங்களில்
நிம்மதி இல்லையே...!!!
அட யார் அழுவது அங்கே?.....
எங்கள் பிள்ளைகள் கண்மூடி
துயின்றது தாய்மண்ணின் மடியில்
அவர்கள் எப்போதும் வாழ்வது
எங்களின் இதயங்களின் அடியில்.....!!!
கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை
எங்கள் கண்மணிகளின் நினைவிருக்கும்.
அவர்களின் கனவும் இருக்கும்.
கார்த்திகை பூக்களே நலமா?
கல்லறை தெய்வங்களே சுகமா?
உறவுகள் நலமா?
நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?
விதையாய் விதைத்தோம்
விருட்சங்களே நீங்கள் முழைப்பது எப்போது?
கல்லறைகள் ஒவ்வொன்றும்
உள்ளே கனன்றெரியும் தீக்கிடங்குகள்
தொட்டவனை சுட்டெரிக்கும் வேளை வரும்
எரிமலைகள் வெளியே
எரிவதும் இல்லை
வெளியே தெரிவதுமில்லை.
கல்லறை வந்து கட்டியணைத்து
எங்களின் கவலைகள்
சொல்லதுடிக்குது மனது..!!!
வீர வேங்கைகளே
உங்களின் விழி திறக்காதா ?
விரைவில் எங்களுக்கு
வழி பிறக்காதா?
மாவீரர்களே எங்களின்
மனம் கனக்குதே..!!!
மறுபடியும் ஒரு நாள்
உயிர் வலிக்குதே..!!!
கார்த்திகை பூக்களே நலமா?
கல்லறை தெய்வங்களே சுகமா?
உறவுகள் நலமா?
நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?
மணியோசை கேட்டால்
மனம் உருகும்
துயிலும் இல்லத்தில்
எங்களின் உயிர் கருகும்
விளக்குகள் எரிக்கையில்
எங்களின் விழி கலங்கும்
விரைவினில் விடியும் என்றே
அது சொல்லி எரியும்
விழி நீர் ஊற்றி விதைக்கும் போது
விம்மி வெடிக்கும் மனது
அந்தக்கணம் எழுத்தில்
சொல்ல முடியாத உணர்வு
வார்த்தைகளால் சொல்ல முடியாத
உங்களின் தியாகங்கள்
எவனும் செய்யவே முடியாத
உங்களின் யாகங்கள்....!!!
தியாக தீபங்கள் அணைகையில்
அண்ணையின் அடி வயிறு எரியும்
அவருக்கு அவருக்கு அரிகில் இருந்த
உங்களுக்கு மட்டும் தான் அது தெரியும்
அத்தனை நாளும் தூங்காத உங்கள் விழிகள்...!!
அன்னையின் அன்பான குரல் கேட்ட பின்னே
அமைதியாய் கண் துயிலும்.
மண்ணில் விடுதலை
தீ மூண்டெரியும்
அதில் நிதம் நிதம்
உம் நினைவும் சேர்ந்தெரியும்.
கற்பனையே செய்ய
முடியாத அற்புதங்கள்
யாரும் செதுக்க
முடியாத சிற்பங்கள்
கல்லறையில் துயிலும்
அக்கினிக் குஞ்சுகள்
கருக்கொண்டு கிடக்கும்
தமிழீழத்தின் பிஞ்சுகள்
கார்த்திகை பூக்களே நலமா?
கல்லறை தெய்வங்களே சுகமா?
உறவுகள் நலமா?
நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?
வெள்ளை மணல் வெளியில்
உங்களின் கால்த்தடம் தெரியும்
விரைவினில் விடிவு வரும் என்று
சொல்லியே அது சிரிக்கும்
கடற்கரைக் காற்றினில்
கந்தக வாசம் வரும்
கரும்புலிகளின் நினைவுகளும்
அதில் சேர்ந்து வரும்
தூரத்தில் தெரியும்
வானம் சிவக்கும் - அதில்
சிந்திய உங்களின்
குருதி இருக்கும்
வானத்தில் இருந்து வந்து விழும்
மழைத்துளியில் - நீங்கள்
சிந்திய வியர்வையின்
உப்புக் கரிக்கும்
பூத்துக்குலுங்கும் கார்த்திகைப்பூக்களில் உங்களின்
புன்னகையும் பூத்திருக்கும்
மூண்டெரியும் தீபச்சுடரிலே உங்களின்
செம்முகமும் சேர்ந்தெரியும்
தாயக நினைவுகள்
ஆயிரம் வந்தாலும் - அட
சத்தியமாய் அத்தனையிலும்
நீங்கள் இருப்பீர்கள்
விடுதலைத் தாயின்
செல்லப்பிள்ளைகள் - எங்கள்
வீட்டு முற்றத்தில்
வளர்ந்த முல்லைகள்
கார்த்திகை பூக்களே நலமா?
கல்லறை தெய்வங்களே சுகமா?
உறவுகள் நலமா?
நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?
காற்றோடு கலந்தாலும்
கடலோடு கரைந்தாலும்
மண்ணோடு புதைந்தாலும்
மாவீரன் சாவதுமில்லை
மாவீரம் அழிவதுமில்லை
விடிகின்ற வேளையில்
உங்களுக்கு விளக்கெரிப்போம்
எல்லாம் முடிகின்ற போதிலே
மீண்டும் உம்மை விதைத்திடுவோம்.
எதுவரினும் உங்களை
மறந்திட மாட்டோம்
நீங்கள் நடந்திட்ட பாதையை
விட்டு விலகிட மாட்டோம்
எவன் பேச்சையும் நாங்கள்
கேட்கவே மாட்டோம்
அன்னையின் குரலுக்காய் காத்திருப்போம்
அதுவரை உங்களோடு......!!!
கார்த்திகை பூக்களே நலமா?
கல்லறை தெய்வங்களே சுகமா?
உறவுகள் நலமா?
நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?
க.ப.சுரேன்