இந்தியருக்கு நோபல் பரிசு? --- இனி எப்போது கிடைக்கும்????

ஒவ்வொரு வருடமும் நோபல்பரிசு அறிவிக்கப்படும் போதெல்லாம். இந்தியர் எவருக்கேனும் அறிவிக்கப்படுமா என இந்தியாவே எதிர்பார்க்கும். வழக்கம்போல் ஏமாற்றம்தான் மிஞ்சும். இதுவரை இந்தியாவில் நோபல்பரிசு பெற்றவர்கள் என்று பார்த்தால் 8 பேர் பெற்றுள்ளனர். அவர்களில் உண்மையான இந்தியர் அதாவது இந்திய குடியுரிமையை கொண்டவர்கள் என்று பார்த்தோமானால், ரவீந்திரநாத் தாகூர் (1913), சர்சி.வி.ராமன் (1930), அன்னை தெராசா (1979), டாக்டர் அமர்த்தியா சென் (1998) ஆகியோர் ஆவர். மீதியுள்ளவர்கள் ஹர்கோவிந்த் குரானா (1968), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வி.எஸ்.நெயில்பால் (2001), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆகியோர் இந்திய குடியுரிமையை துறந்தவர்கள். இந்திய வம்ச வழியினர் அவ்வளவுதான்.



இருந்தபோதிலும் இன்றைக்கு இந்தியாவில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளுக்கு ஏனோ ஆண்டுதோறும் நோபல் கமிட்டி பாராமுகம் காட்டிவருகிறது. இன்று இந்தியாவில் தலை சிறந்த விஞ்ஞானிகள் என்று எடுத்துக் கொண்டால் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் (மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்) ஆகியோர் உள்ளனர். இவர்களில் நோபல் பரிசுக்கு மிகவும் பொருத்தமானவர் இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் (எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர்) மட்டுமே. ஒவ்வொரு வருடமும் இவரின் மீது புகார் தெரிவிக்கப்படுகிறது. அதனாலேயே இவரை நோபல் கமிட்டி தேர்வு செய்ய மறுக் கின்றனர். இதற்காக இந்தியா எந்தவொரு முயற்சியும் எடுத்தாகத் தெரியவில்லை. பெரும்பாலும் இவர்மீது பல வேளாண் விஞ்ஞானிகள் சில புகார்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றை தெளிவுபடுத்தினால் இவரின் பரிந்துரையை நோபல் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் என தெரிகிறது. முக்கிய புகார்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

இந்தியாவில் பிரபல சுற்றுச்சுழல் ஆர்வலர் கிளாட் ஆல்வாரிஸ் (கோவ பவுன்டேஷன், இயக்குநர்) 1986, மார்ச் 23-இல் இல்லஸ் டிரேடட் வீக்லி (Illustrated weekly of India) இதழில் "மாபெரும் விதை கொள்ளை' (the Great Gene Robbery) என்ற கட்டுரை எழுதியுள்ளார். (பூவுலகு - 2009 ஜூன் மற்றும் ஜூலை இதழ்) அக்கட்டுரையில் உள்ள முக்கிய அம்சமானது. ((www.Swamiscaper. blogspot.comஇல் பார்க்கலாம்)

"டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த 1982-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக்குழு தலைவர் பதவியிலிருந்தும், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் (அதற்கு முன்னதாக வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவர்) விலகி, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகருக்கு அருகே உள்ள லாஸ் பேனோஸ் பகுதியில் இருக்கும் பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தாவினார். இங்கு தாவல் என்ற வார்த்தை நோக்கத்துடனேயே பயன்படுத்தப் படுகிறது. நாட்டின் உணவு என்ற மிக முக்கியமான துறையில் அரசின் அறிவியல் ரகசியங்களை அறிந்திருக்கக்கூடிய மிக முக்கியமான அறிவிய லாளரை, திடீரென ஒரு நாளில் அப்பதவியிலிருந்தும், நாட்டிலிருந்தும் வெளியேறி அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைவராக பதவி ஏற்பதற்கு, இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் அனுமதிக்காது. பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்புடைய இரண்டு அறக்கட்டளைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரிசி உணவை அவ்வளவாக உட்கொள்ளாத அமெரிக்கர்கள், ஆசியாவின் நெல் ஆராய்ச்சியைத் தங்களது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏதுவாக 1960-ஆம் ஆண்டு பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினர்.

இருபதாம் நூற்றாண்டின் எல்லையில் நிற்கும் நாம், நமது வாழ்க்கையை முடிவு செய்யும் முக்கிய உணவுப் பொருட்களான அரிசி மற்றும் கோதுமை ஆகியவை குறித்த ஆய்வுகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்கத்திலும் கட்டுப்பாட்டிலும் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக எம்.எஸ்.சுவாமி நாதன் பதவி ஏற்றது - பலவிதங்களிலும் அவருக்கு பின்னடைவாகவும், பதவி இறக்கமாகவுமே இருந்தது. இந்தியாவின் பல்வேறு அறிவியல் துறைகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான அறிவியலாளர் களுக்கு தலைவராக இருந்த அவர், இந்தோனேஷியாவில் 200-க்கும் குறைவான அறிவியலாளர்களுக்கு மட்டுமே தலைமை தாங்கினார். இதற்கு பலனாக அவருக்கு கிடைத்தது: பணம்! வருமான வரி கட்டத் தேவையில்லாத பணம் மட்டுமே!!

அமெரிக்க இயக்குநர்களால் நிர்வகிக்கப்பட்ட இந்த பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம், பூச்சித் தாக்குதல் காரணமாக உயர் விளைச்சல் தரும் பயிர்கள் விவகாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்தது. எனவே, உயர் விளைச்சல் நெல்ரகங்களுக்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் எதிர்ப்புத் திறனை வழங்கக்கூடிய மரபணுக்களைக் கொண்ட மரபணு வங்கியை விரிவாக்குவது பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உடனடியாகத் தேவையாக இருந்தது. இந்தியாவில் ஏராளமான மரபணுக்களைக் கொண்ட பயிர் மரபணு வங்கி இருந்தது. இந்த சூழ்நிலையில் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக எம்.எஸ்.சுவாமி நாதன் நியமனம் செய்யப்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம், தலைசிறந்த அறிவியல் ஆய்வு மையம் அல்ல! இது தனியாரால் கட்டுப்படுத்தப்படும் சாதாரண ஆய்வு மையம்தான். இருந்தபோதிலும் சுவாமிநாதனை போன்ற ஒருவர் இதன் தலைவராவதை ஏற்பது கடினமே. இந்த பதவி வகிப்பவரின் அறிவியல் நிபுணத்துவத்தைவிட, காரியங்களை சாதிக்கும் செயல்பாட்டுத் திறனே மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படும்.

சிறந்த அறிவியல் பின்னணி கொண்ட யாரும் மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட், மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப இன்ஸ்டிடியூட், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் போன்ற எந்தவொரு நிறுவனத்திலும் இயக்குநராக நியமிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக எவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் பணியமர்த்தப்பட்டார் என்று அறிவார்ந்த பிலிப்பைன்ஸ் மக்களை கேட்கிறேன். இக்கேள்வியின் உண்மையான பதில் மிகவும் நகைச்சுவையானதாகும்.

பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மூன்று பேர் விண்ணப்பித்தனர். முதலாமவர், ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் துணைத்தலைவர். இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டால் மனைவியுடன், துணைவியையும் அழைத்து வருவதாக தெரிவித்தார். இரண்டாமவர் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் பெயருக்கு பின்னே போட்டுக் கொண்ட பட்டப்படிப்பை படிக்காதவர் என்று தேர்வின்போது தெரிய வந்தது. இந்த வரிசையில், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா நிறுவனம் பதிப்பித்த அறிவியல் மற்றும் எதிர்காலத்திற்கான 1979-ஆம் ஆண்டு புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டின் பிரபல "அறிவியல் மோசடியாளர்கள்' என்று பால் காம்மரெர் மற்றும் சிரில் பர்ட் ஆகியோருடன் இணைந்து குறிப்பிடப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.'

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிரபல அறிவியல் மோசடியாளர் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாரா? என்பதுதான். இதற்காக சில இடங்களில் தேடி கண்டுபிடித்தோம். Year book of Science and the future, 1979' என்பது அந்த நூலின் பெயர். இந்த நூலை (Encyclopedia Britannica) ISBN - 0852293461 வெளியிடப் பட்டுள்ளது.

இந்த நூலில் வந்த தகவல் அடுத்து இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் அன்று இந்த செய்தி பரபரப்பானது. இதை பற்றி இந்திய பாராளுமன்ற மேலவையில் (ராஜ்யசபா) டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மீது (1979 Year of Science and the future (Encyclopedia Britannica) தெரிவித்த அறிவியல் மோசடியாளர் என்பதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. (India Parliamentary debates : official report, volume 113, Issue 13 - Rajya sabha - 1980 - www.rsdebate.nic.in/browse-data) மேலும் இதே விஷயத்தை 'Bias in Scientific Rearch' என்ற கட்டுரையை பேராசிரியர் எமிரிடஸ் இயான் ஜேம்ஸ் ராபர்ட்ஸ் (லண்டன் பல்கலைக்கழகத்தில் மனோவியல் பேராசிரியர்) எழுதியுள்ளார்.

1967-ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடந்த அறிவியலாளர் கருத்தரங்கு ஒன்றில், பாலுக்கு இணையான அளவில் புரதம் மற்றும் "லைசின்' எனப்படும் அமினோ அமிலம் கொண்ட புதிய ரக கோதுமையை தான் உருவாக்கி யுள்ளதாக எம்.எஸ்.சுவாமிநாதன் பெருமை யோடு அறிவித்தார். இந்தப் புதிய இரக கோதுமைக்கு "சர்பதி சோனாரா' (Sharbarti sonara) என்று பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்தார். (www.gmwatch)

ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் இயங்கும் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த உயிர்ம வேதியியல் விஞ்ஞானியான ஒய்.பி. குப்தா என்பவர் (இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் அறிவியலர் - IAR)) இப்புதிய இரக கோதுமை பற்றிக் கூறப்படும் தகவல்கள் பொய்யானவை மோசடித்தனமனவை என்று அப்போதே ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தினார்.

இதுதவிர, "சிமிட்' (CIMMYT - Central International de Mejoramiehto de Maizy Trigo) என்றழைக்கப்படும் மெக்சிகோவில் உள்ள கோதுமை மற்றும் மக்காச்சோள ஆய்வு நிறுவனம், சுவாமிநாதனின் புதிய கண்டுபிடிப்பு மோசடித்தனமானது என்று தனது ஆய்வுகளின் மூலம் 1969-ஆம் ஆண்டில் சுட்டி காட்டியது. இருப்பினும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் புதிய ரக கோதுமையைக் கண்டு பிடித்துள்ளதாகக் கூறி, எம்.எஸ்.சுவாமி நாதனுக்கு 1971-இல் மகசேசே விருது வழங்கப்பட்டது.

மீண்டும் 1974-இல் "நியூ சயன்டிஸ்ட்' என்ற அறிவியல் ஆய்விதழ், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வு மோசடிகளை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்திக் காட்டியது. இவ்விதழ் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில், "ஸ்டேட்ஸ்மேன்' நாளேடு 1977, மே 17-ஆம் நாளன்று, சுவாமிநாதனின் ஆய்வுகன் மீது மீண்டுமொரு விவாதத்தைத் தொடங்கியது. தான் தவறிழைத்துவிட்டதாக சுவாமிநாதன் ஒப்புக்கொண்டார். (new scientist, 2 september 1976- vol 71, No1016 weekly) இது எப்படி இருந்தாலும் இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு. ஆப்கானிஸ்தானத்தில் தாக்குதல் நடத்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வுக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கும் (2009) சீனா நாட்டின் தேச துரோக குற்றம் சாட்டப் பட்ட லியூசியாபோவுக்கு அமைதிக்கான (2010) நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு தேர்வு செய்யப்பட்ட எலன் ஜான்சன் சர்லீஃப் மீதுகூட புகார் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் நோபல் பரிசுக்கு தகுதியானவரே. அதனால் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கும் நாளை எதிர்பார்க்கிறோம்.

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 2:03 pm)
பார்வை : 680

மேலே