காதல் என்றால் கொல்லும்!
வானம் வரைக்கும் வளர்ந்து விட்டேன்
நிலவே ! உன்னைப் பிடிப்பதற்கு!
பூமிக்குள்ளே புகுந்து விட்டேன்
உன் மனதின் இரகசியம் படிப்பதற்கு!
அற்றைத் திங்கள் அந்நிலவில்
ஒற்றை ஆளாய் நானிருந்தேன்
மாற்றம் என்று எதுவுமில்லை !
மனதில் குழப்பம் நுழையவில்லை !
தன்னந் தனியே நானிருந்தும்
தவிப்பு, தாகம் எனக்கு இல்லை !
தன்னிலை நானும் இழக்கவில்லை !
இற்றைத் திங்கள் இந்நிலவில்
எனக்குள் நீயும் நுழைந்து இருந்தாய் !
எத்தனை மாற்றங்கள் எனக்கு உள்ளே!
ஆப்பிள் கடித்த ஆதாமாய்
அலைகிறேன் ஏடேன் தோட்டத்திலே!
ஞானம் தந்த ஏவாளே !
எங்கே ஒளிந்தாய் இருட்டுக்குள்ளே ?
உன்னைத் தேடி அலைகின்றேன்
உன்னால்தானே தொலைகின்றேன் ?
என்னைச் சிறையில் அடைப்பதற்கா
சிரிப்பு 'வாரண்ட் ', கொண்டு வந்தாய் ?
உன்னைத் தொடர்ந்து வந்ததற்கா
என்மேல் வாளை ஊன்றுகின்றாய்?
முன்னுரை தந்தாய் பார்வையிலே
ஓடிவந்தேன் வேர்வையிலே
ஒளிந்து கொண்டாய் போர்வையிலே
எங்கே செல்வேன் பாதையில்லை !
போதும் போதும் கண்ணா மூச்சி
போகுது பாரென் உயிர்மூச்சு
பொழுது புலர்ந்தால் புலம்பல் பேச்சு
புதை குழி தானா எனக்கென்றாச்சு?
முத்தம் கொடுக்க இதழ் கொடுப்பாய்!
மோகத் தீயை நீ அணைப்பாய் !
சித்தம் கலங்கித் திரிபவனை
செத்த பிறகா வந்தணைப்பாய்?