கண்ணீர் கடல் நாங்கள்

---கண்ணீர் கடல் நாங்கள்---

நீ கடல் என்னும் தாயா? இல்லை
பிணம் தின்னும் பேயா?

சங்குகளை பொருக்கி பொருக்கி
சலித்துப் போன இவர்கள்
சடலங்களை பொருக்கி கொள்ளட்டும் என
சபதம் கொண்டாயா?

உன் அலைகள்
மண்ணில் விழுந்து விழுந்து
மரத்துப் போனதா?
உன் அலைகள்
மனிதனை விழுங்கி விழுங்கி
கொழுத்துப் போனதா?

உன்னை தாய் என்று
அன்பாய் அழைத்தோம்

தாய் தன் குழந்தயை
இடுப்பில் உட்கார வைத்து
உலா வருவாள்.

நீ ஏன்
உன் குழந்தைகளின்
இடுப்போடித்தாய்?

சோற்றில் உப்பிட்டு உண்ணும் எங்களுக்கு
சொரணை இருக்கிறதா என்று
சோதிப்பதுவோ?
உப்பே உடலென உருவானவளே! உனக்கு
கருணை இருக்கிறதா என்று
கேட்க வைப்பதோ?

உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

உன் மர நடு விழாவில்
ஏன் மண்ணில்
விதைகளுக்கு பதிலாக
சதைகளை புதைத்துவிட்டு போனாய்?

சிகப்பு நிறம் வேண்டுமென
மனித ரத்தத்தை
எடுத்து கொண்டாயா?

நாசமாக்கத்தான்
என் நகரத்திற்குள்
நடந்து வந்தாயா?

வசைபாடும் எதிரிகள்
வாசல் வந்தால்க்கூட
"வா" என்றே அழைத்து
பழகிவிட்டோம்.
அதனால் தான் உன்னை
தடுக்க மறந்துவிட்டோம்.

அனுமதி கேட்க்காமல்
உன் அழகிய தேகத்தில்
கப்பலை மிதக்கவிட்டோம்
என்பதால்தான் - உன்
சேப்பலை வைத்து என்
செவிகளில் அரைந்தாயா?

காலை நனைத்த
உன் அலைகள்
எதோ மன்னிப்பு கேட்பதாய்
எண்ணி கொண்டிருந்த எனக்கு
" காலை வாரப் போகிறோம்
கவனமாய் இரு " என்று சொன்னது
காதில் விழவில்லை.

நாங்கள் இதுவரை
தொலைத்த பொருட்களை எல்லாம்
தெருக்களில் தேடிகொண்டிருந்தோம்.
நீதான்
தெருக்களையே தேட வைத்த
தேவதை.

நேசங்களை பறிகொடுத்து
என் உறவுகள்
நெஞ்சில் அடித்து அடித்து
அழுத காட்சி...
இன்னும் எங்களால்
சிரிக்க முடியவில்லை என்பதற்கு
அதுவே சாட்சி.

உனக்கு தின்பண்டமாய்
என் உடலாகிவிட்டது.
நாங்கள் சிந்திய கண்ணீர்
சிறு கடலாகிவிட்டது.

அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!

---தமிழ்தாசன்---

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (27-Dec-11, 10:41 am)
பார்வை : 337

மேலே