தென்றலைத் தூதுவிட்டேன்.
அன்புத் தோழியே!
அடிக்கடி சொல்வாயே
காற்றைப்போல் நாமென்று
இதோ கடல்கடந்து வந்தபின்பு
உன்னைநான் காற்றாய் நேசிக்கிறேன்
பூந்தென்றல் தவழ்ந்து வந்து
என்தோள்களை உரசும்போது-
என்தோளில் நீ
சாய்வதுபோல் உணர்கிறேன்
குளிர்காற்று என்கைகளுக்குள்
குளிரூட்டும்போது - நீ
என்கைகோர்த்து நடக்கிறாய்
என்றெண்ணி கைகளை
இயல்பாகவே இறுக்குகிறேன்
அனல்காற்று அடிக்கும்போது -நீ
என்மேல் கொஞ்சம்
கோபம் படுகிறாயென
கொஞ்சும் கோபமாக
நானும் முகத்தை திருப்புகிறேன்
துள்ளித் திரிந்த நாள்களில் நாம்
செய்த குறும்புகள் அத்தனையும்
அடிநெஞ்சிற்குள் நங்கூரம் இட்டதடி
செய்யாத செயலுக்கு
அடிகள் வாங்கியதும் நினைவினில் அடிக்கடி
புத்தம் புதிதாக
புதுத்துணி அணியும்போதெல்லாம்
புதுவருடமடி நமக்கென்று
பூத்து சிரித்த நியாபகங்கள்
பூவாக நெஞ்சுக்குள்ளே பூக்குதடி
ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி
அங்குமிங்கும் அலைந்த காலத்தை
அசைபோட்டுக்கொண்டே
அயல்நாட்டில் வசிக்கிறேன்
ஆன்மாவிற்குள்
ஆனந்தம் அலைபாயும்போது
அடிதோழியே! -நீ
அருகே இருக்கவேண்டுமென்று
அடித்துகொள்ளும் நெஞ்சத்திற்கு
ஆறுதலும் சொல்கிறேன்
எது எப்படியோ உனைத்தேடி
தென்றல்வழி நான் வருவேன்-அது
உனைத் தழுவும்போது
தெளிவாய் நீ உணர்வாய் எனை
காலங்கள் கடந்தபோதும்
மரணங்கள் நிகழ்ந்தபோதும்
பூமியுள்ள காலம்வரை காற்றிருக்கும்
காற்றை சுவாசிக்கும் காலம்வரை
நாமிருப்போம்
நம்முள் கலந்திந்திருப்போம்
நட்பில் இணைந்திருப்போம்..