மனதினுள் புழுங்குமோர் மண்புழு

காலமாற்றத்தைக் கணிப்பிடும்; சோதிடனே!
காத்திருந்து கலர் பரப்பும் ஓவியனே!
காற்றிலாடி சரசரக்கும் பாடகனே!
வானுக்கும் விண்ணுக்கும்
நூலிழுக்கும் நெசவாளியே!
அழகாய்த் தோன்றி உலகை
ஆட்டிப் படைக்கும் குள்ளனே!
கண்ணைப் பறிக்கும் மின்னல் தந்த மின்னதிர்வாளனே!
மூடியில்லாச்செவி வெடிக்க இடிஇடிக்கும் மோசக்காரனே!
தளம் பிளந்து உலகிழுக்கும் தடியனே!
கூரையில்லா வீட்டில் குடியிருக்கும் எம்மை
குறிபார்த்துக் காத்திருக்கும் காரியக்காரனே!
கண்வெட்டுமுன் உயிர் குடிக்கும் பாதகனே!
விஞ்ஞானியின் கண் பிதுங்க வைக்கும்
வீரனே! அதி சூரனே!
காலைவேளை கண்விழிக்கும் கதிரவனுமுன் சேவகனோ!
காற்றாய் வந்தாய் சூறாவளியாய் மாறினாய்
கடலலையாய் வந்தாய் சுனாமியாய்ச் சுவடு பதித்தாய்
மழையாய் வந்தாய் வெள்ளமாய் உயிர் குடித்தாய்
நிலமாய்த் தாங்கினாய் நிலநடுக்கமாய்,
எரிமலையாய்ச் சீறினாய் தாக்கினாய்
உன்னைப் புகழ்ந்து பாட நான் புகழேந்தியுமில்லை
உன்னை இகழ்ந்து பாட நான் காளமேகமுமில்லை
உன் குற்றத்தைச் சுட்டிக்காட்ட நான் நக்கீரனுமில்லை
குறைகண்டு செவி கடிக்க நான் ஒட்டக்கூத்தனுமில்லை
மனதினுள் புழுங்குமோர் மண்புழு – உன்னால்
நலிவடைந்து உயிரிழக்கக் காத்திருக்குமோர் காரிகை

எழுதியவர் : kowsy (9-Jan-12, 9:21 pm)
சேர்த்தது : KOWSY2010
பார்வை : 236

மேலே