நிலவைத் தொட்ட தமிழ்..
தமிழின்று புகழுற்றதே! -அது
தமிழரின் எண்ணம்போல்
திகழ்வுற்றதே!
அமிழ்திங்கு நிலமுற்றதே-சுற்றும்
அகிலத்தின் மொழிகளும்
பலமற்றதே!
தமிழின்று நிலைபெற்றதே! -எங்கள்
தமிழ்முன்பு மற்றவை
நிலைகெட்டதே!
தமிழின்று பழிகேட்டதே- அதைத்
தாழ்த்திய நாவுகள்
மொழிகெட்டவே!
எழுகதிர் தமிழோத்ததே! -இனி
இரவில்லை,குறையில்லை
விதிசெத்ததே!
பழுதென்னும் சொல்விட்டதே -அதன்
பலனிங்கு பலர்நாவில்
தேன்சொட்டுதே!
தழின்று கடலுண்டதே -இனித்
தவிக்காது தளராது
அடல்கொண்டதே!
தமிழ்ப்பாதம் தழுவுற்றதே -கடல்
தவற்றினுக்கு அழுதுதன்
கரைநிற்குமே!
நிலவினைத் தமிழ் தொட்டதே! -வேற்று
நிலமென்ன கிரகங்கள்
கைதட்டுதே!
நலமிங்கு கைக்கேட்டுதே -தமிழ்
நம்மொழி எனுஞ்சொல்
வான்முட்டுதே!
புத்தாண்டு நிலம்பார்க்குதே!-பூமி
பொதுமொழி எனத்தமிழில்
நலம்பார்க்குதே!
புத்தாண்டின் வான்பார்ப்போமே!-தமிழ்
பொய்க்காது நன்மைகள்
நாம்சேர்ப்போமே!
-௦-