[84] இந்தியனுள் விரும்புவேன் இவை..!

ஆண்டெல் லாம்நீ அலுத்துக் கொண்டுன்
அமைதி இழத்தல் விரும்புகிலேன்!
மீண்டெத் துயரும் மிகும்,ஆறு இன்றி
விரையும் போது மிகமகிழ்வேன் !
தூண்டும் ஒளி,தான் துடித்தல் போலத்
துயர்,இருள் கிழித்தே அதை,நீயும்
தாண்டி வருக! தமிழ்மக னே!நீ
தனித்தே இல்லை ! இந்தியனே!

சொல்லும் பொருளும் சோர்தல் இல்லாச்
சோதி மனத்தை விரும்புகிறேன்!
அல்லும் பகலும் அதிகம் உழைக்க
அயரா மனத்தை விரும்புகிறேன்!
தொல்லை வாழ்வில் தொலைக வென்று
துரத்தும் நெஞ்சை விரும்புகிறேன்!
வெல்லும் வழியாய் எல்லாம் மாற்ற
விழையும் முயற்சி விரும்புகிறேன்!

எங்கோ எதற்கோ என்றெல் லோரும்
இருக்கும் நிலையை நீமாற்று!
எங்கள் செயலால் எல்லாம் மாறும்
என்றே நினைத்துச் செயலாற்று!
மங்காப் புகழ்,சேர் மனிதப் பண்பை
மனத்துள் வைத்துப் பணியாற்று!
தங்கா உயிரைத் தரணிக் களித்துத்
தங்கும் புகழை நிலைநாட்டு!

சாதிப் பிடியில் சமுதா யத்தைச்
சாய்ப்போர்க்கு இனிதான் நீகூற்று !
நீதிப் படியில் நெறியல செய்வார்
நிகழ்வை எதிர்த்துக் கொடியேற்று!
பேதங் களைவாய்! பெருமை அணிவாய்!
பெயரில் தமிழன் எனக்காட்டு!
நாதங் கூட்டும் நரம்புகள் போல
நாட்டோடு இணைந்து பணியாற்று!

அருமை வாழ்வால் அவனிக் கின்பம்
அளித்தார் இயேசு தனைநோக்கு!
ஒருவர் மனத்தை ஒருவர் புரிந்தே
உதவும் செயல்கள் நீஊக்கு!
உரிமைக்கு ஓடி உழைப்பை மறுக்கும்
உதவாக் கரைகள் நம்சீக்கு!
பெருமை பேசிப் பிறழும் நாக்கால்
பிழைக்கும் அரசியல் தனைத்தாக்கு!

கலைகள் பேருக்கு! கருத்தை உயர்த்து!
காணும் வாழ்க்கைத் தரமுயர்த்து!
கொலைகள் விடுத்துக் கொடுமை தவிர்த்துக்
கூடி உழைத்துக் குடியேத்து!
தலைமை எடுத்துத் தரமும் கொடுத்துத்
தாழ்ந்துள அரசியல் நிலைமாற்று!
மலைகள் கடந்து மதியில் நடந்து
மகிழ்வாய் மக்கள் முகம்பார்த்து !
-௦-

எழுதியவர் : எசேக்கியல் kaliappan (19-Feb-12, 12:58 pm)
பார்வை : 303

மேலே