[91] வா நண்பா! செல்லலாம் வாசல் கவியரங்கம்!
'வாசல்' வரநீயும் வசிக்க லாம்கவிதை!
நேசம் கரங்குலுக்கும்! நெஞ்சினிக்கும் ! -ஊசல்
மனமெதற்குத் தோழா! மகிழ்ச்சி, உன் மட்டோ?
எனக்கும்தான் உண்டே எழு!
தாசர் பலர்வருவர்! 'தண்'என்றும் 'சிவ்' என்றும்'
பாசத் தமிழ்,ஒலிக்கும் பாக்களிலே! -நேசம்
குறையாது! நட்பின் குரல்கேளாப் போது
நிறைவேது? வா,வந்து நில் !
கூடும் கவிஞரையும் கூவும் குயில்களையும்
பாடும் புலவரையும் பார்க்கலாம்!- தேடும்
பொருளோ தமிழ்ச்சுவை ! போல்லாங்கை விட்டே
இருளை விலக்கும் இயல்பு!
'காவி' கறைபடினும், காதல் நெறிகெடினும்
'சாவி' விலைபெறினும், சன்மார்க்கம் -ஆவி
கெடவரினும் தாங்கார் கிளர்ந்துகவி அம்பு
விடவருவார் காண்!வா விரைந்து.
வாநீ கவிபடிக்க! வாய்க்காது அதுவெனில்
தாநீ பரிசெனக்கைத் தட்டுகளை ! -'மா' நீ
பலா,நான் ! வாசல் பலர்க்கு,இங்கு வாழை!
உலாவு! தமிழ்க்'கா'வில் ஒன்று!
வா,நண்பா செல்லலாம்! வாசல் கவியரங்கு!
தேன்,உண்பாய் ! மீண்டுமிதைத் தேடிடுவாய்! -"ஏனில்லை
ஞாயிறுகள் எல்லாமும் ஞானத்தின் வாசலிது!
நோயுறுதே ஞாலமென நொந்து" !
-௦-
(வாசல் கவியரங்கம் -மடிப்பாக்கம் மூவரசன்பேட்டையில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயுறன்று கூடுகிறது)