வள்ளியம்மாள் அண்ணி l

வள்ளியம்மாள் அண்ணி
என் தந்தை வழிப் பாட்டி
எட்டு குழந்தைகளை ஈன்றெடுத்த
தாய் -எனினும் ஒடிசலான தேகம்
அள்ளி முடிந்த வெள்ளைமுடி
சுருக்கங்களுடனே பிறந்திருப்பாளோ
என எண்ணவைக்கும் முகம்

அன்பைக்கூட வசவுகளாய்த்தான்
வெளிப்படுத்த முடியும் அவளால் !
ஆனால்
உயிர் முழுவதையும் தான் பெற்ற
செல்வங்களுடன் உலவ விட்டு
உடல் இயந்திரம் போல் கடமை செய்ய
இயங்கிக் கொண்டிருந்தாள்
அடுக்களையும் ஆட்டுரலும் தொழுவமும்தன்
தன உலகமென
புளிப்பும் காரமுமாய் அவளது கூட்டாஞ்சோறு
இன்றும் நினைவில் ருசிக்கிறது
கோவில்கொடை தேரோட்டக் கதை
சொல்லிக்கொண்டே எனக்குத்
தாழம்பூ பின்னலிட்ட கணங்கள்
அவளுடனான என் அண்மைக்கணங்கள்

நதிபோல ஓடிக்கொண்டிருந்த அவள்
வாழ்வில் சுழல்கள் வந்தன
ஒன்றன் பின் ஒருவராக மூன்று
புதல்வர்களைக் காலன் வாரிச்செல்ல
உயிர் சுருங்கிப் போனாள்
காலொடிந்து கிடந்த போதும் கலங்காமல்
போராடி எழுந்து நடந்த அவள்
காலனின் வதை தாளாமல்
மரணத்தை எதிர் நோக்கித் தவமிருந்தாள்
பதினைந்து நாட்கள் பச்சைத் தண்ணீர்
பல் படாமல் தன உயிரைத் தானே
வதம் செய்தாள்

அன்று
காலன் கூடக் கண் கலங்கியிருப்பான்
அந்தத் தாய்மையின் தகவு கண்டு!
அவள் நெஞ்சத்தின் கனல்
அவளைக் கிடத்தியிருந்த
கூடத்தில் தகிப்பது போல்
இன்றும் உணர்வதுண்டு

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (24-Feb-12, 3:21 am)
பார்வை : 467

மேலே