என் எதிரி அல்ல நண்பன்
ஒற்றை அடிப் பாதையில் - தனி
ஒருவனாக நினைத்துப் பயணித்தேன்...
எதிரில் நான் பார்த்தபோது...
எழிலான மலைச்சிகரங்கள், மலர்கள்...
எல்லாமே என் மனசுக்குப் பிடித்ததாய்......
எதிரில் ஒருவன் வந்துகொண்டிருந்தான்
எரிச்சல் வெடித்துக் கொண்டிருந்ததது முகத்தில்
எதிரி என்று எனக்குள் தோன்றியது.....
இறைவனே இவன் எங்கிருந்து வந்தான்..?
எப்படிக் கையாள்வது இவனை ?
எரிந்து விழவா நானும் பதிலுக்கு ?
எனக்குள் மனசு சொல்லியது.......
எழில் சிகரங்களும் மலர்களும் காண்கையில்
ஏகாந்தமான உன் கண்கள்......
ஏன் இவனைக் காண்கையில் மட்டும்
எரிச்சலாய் உணர்கிறது....?
கேள்விக்குப் பதில் புரிந்தது.......
எதிரி எதிர்த்து போராடுவதற்கோ
ஏளனம் செய்வதற்கோ
எரிந்து விழுவதற்கோ இல்லை....
எனக்குள் உள்ள அன்பைக் கொடுத்து
அவனுக்குள் இருக்கும் அன்பை பெறுவதற்கு
ஆண்டவனால் அனுப்பப் பட்டவன்
அன்பானவன் என் எதிரி.........
அவனை நான் விரும்புகிறேன்....
அவன் இப்போது என் எதிரி அல்ல நண்பன்