பிச்சை
கன்னியாகுமரி விரைவு வண்டி சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தைலிருந்து புறப்பட்டது.
தமிழ்நாட்டில் பெய்யும் கோடை மழை போல் அதிசயமாக,அந்தப் பெட்டியில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
அன்பிற்கினியன் என்று உண்மைப் பெயர் அழைப்போரை கோபத்தோடு பார்க்கும் 'அன்பு' இருந்த பகுதியில் அவனையும் சேர்த்து 6 பேர் இருந்தனர்.
விரல்கள் தொட்டுத் தொட்டு மண் நிறம் மாறிய வெள்ளைத் தாள் புத்தகத்தை எத்தனையாவது முறையோ இரசித்துப் படித்துக் கொண்டிருந்த முதியவர்,
விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையை பார்த்துக்கொண்டே,வரும் வைகாசியில் அதன் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதுகில் புத்தக மூட்டை கட்டிவிடும் யோசனையில் இருக்கும் தாய்,
தலைகீழாய் பிடித்திருந்த புத்தகத்தில் தலையை மறைத்துக்கொண்டு,ஒருவரை அறியாமல் மற்றவரைப் பார்த்து தங்களுக்குள் சிரித்துச் சிலிர்த்துக் கொண்டிருந்த இரு இளம் இதயங்கள்.
பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில்,நல்ல சம்பளத்தில் வேலை செய்தாலும்,சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் அவனை சிக்கனம் என்று அவன் ஊர்காரர்கள் அழைக்க,'கஞ்சன்' என்ற பட்டப்பெயர் வைத்திருந்தனர் அவன் சக ஊழியர்கள்.
சிக்கனமா கஞ்சத்தனமா என்றெல்லாம் பெரிதாய் கண்டுகொள்ளாத அவன்,தனக்கு பிடித்தவற்றை மட்டும் செய்யும் இக்காலத்தின் பெரும்பாலான இளைஞர்களின் எடுத்துக்காட்டு.
கண்கள் மூடி காதொலிப்பான்களை மாட்டி,rockstar இரசிக்கத் தொடங்கினான்.
ஆயிரம் வித்தியாசமான குணம்கொண்ட மனிதர்களை சுமந்து சென்ற அந்த இரயில்,சென்னையின் எல்லைகள் கடந்து அமைதியாய் இயங்கிக் கொண்டிருந்த சிற்றூர்களை,தன் ஒலிப்பானால் பயமுறுத்திவிட்டு பாய்ந்து சென்றது.
"அண்ணே காசு கொடு" இரண்டு திருநங்கைகள்,யாசகம் கேட்டவாறு வந்தனர்.
சிலர் அவர்களின் தோரணைக்கு பயந்து கொடுக்க,சிலரோ அவர்கள் 'சாபம்' பலிக்கும் என்ற மூடநம்பிக்கையால் 'நமக்கேன் வம்பு' என்று கொடுத்தனர்.
2ரூபாய் கொடுத்தான் அவன்.
"5 ரூபா ஆவது குடுண்ணே"
"எடுக்கறது பிச்சை.இதுல என்னமோ குடுத்துவெச்ச மாதிரி 5ரூபா கேக்கற?" அவன் அதட்ட,
"சும்மா குடுண்ணே" சளைக்காமல் கேட்டனர்.
"அதெல்லாம் முடியாது.உழைச்சு சாப்புடு.அப்பதான் காசோட அருமை தெரியும்.போ போ." விரட்டினான்.
"வேலை கொடுத்தா நாங்க ஏன் பிச்சை எடுக்க போறோம்" அவர்கள் கேட்க,
"உங்கள மாதிரி நெறைய பேர் இப்போ சாதிக்கிறாங்க.அவங்கள பார்த்து கத்துக்கோங்க.திறமை இருந்தா எல்லாரும் சாதிக்கலாம்"
அவன் சற்றே குரலை உயர்த்திச் சொல்ல,
முகத்தில் பயத்துடன் இருவரையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் பிள்ளையினை மடியில் ஏற்றி அதனை திசை திருப்ப முயன்றாள் தாய்.
"நீங்க எல்லாம் குடுத்து பழகுறது தான் சார் தப்பு"
அந்த முதியவரிடம் கூறினான்.
"உனக்கு குடுக்க மனசில்லனா குடுக்குற புண்ணியவான கெடுக்காத."
திட்டிவிட்டு நகர்ந்தனர் அந்த திருநங்கைகள்.
"எத்தனை பேர் இவங்களுக்கு வேலை குடுப்பாங்க?
எத்தனை பேர் இவங்கள ஆதரிச்சு படிக்க உதவி பண்ணுவாங்க?
கிண்டல் கேலியிலேயே இவங்க திறமை அமுங்கி போயிடுது"
அந்த முதியவர் அவனிடம் சொன்னார்.
"இவங்கள மாதிரி நெறைய பேர் இப்போ நல்ல நிலைல இருக்காங்க.மத்தவங்க இப்படி பிச்சை எடுத்து திரிய உங்கள மாதிரி ஆளுங்க குடுத்து பழக்கறது தான் காரணம்"காட்டமாய் கூறினான் அவன்.
"நீங்க சொல்ற அந்த ஆயிரத்துல ஒரு சாதனையாளர் எல்லாம் அவங்களுக்கு மனசளவுல ஆவது பக்கபலமா ரெண்டு பேர் இருந்ததால தான் எல்லா மனசு வலியையும் பொறுத்து முன்னேறுனாங்க.
இந்த மாதிரி பிச்சை எடுக்குறவங்க எல்லாம் அப்பா அம்மாவாலேயே துரத்திவிடப்பட்டவங்க."
"பிச்சை போடுறதுனால அவங்க மனக்குறைய தீர்க்கவா போறீங்க?"
நக்கலாகக் கேட்டான்.
"அவங்கள ஆதரிச்சு இயக்கம் நடத்துற அளவுக்கு எனக்கு பணமும் நேரமும் இல்ல.என் குடும்பத்தையும் நான் பாக்கணும்.ஆனா அவங்களோட ஒரு வேளை சாப்பாட்டுக்கு உதவ முடியும்.அதான் பண்ணேன்."
"ம்ம்ம்....." கொட்டி முடித்தான் அந்த வாக்குவாதத்தை.
"சே.தெரியாம இந்த பெருசு கிட்ட பேசிட்டன்.மொக்க போட்டு சாவடிச்சுடுச்சு."
தனக்குள் புலம்பியவாறே முறித்திருந்த பாடலைத் தொடர்ந்தான்.
நல்ல வேளை முடித்தார்கள் என்று பிள்ளையை மறுபடி விளையாட இறக்கிவிட்டாள் அவள்.
விழிகளில் பேசிக்கொண்டிருந்த அந்த இளசுகள் இவர்களின் வாய்ப்பேச்சைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.அவர்கள் வேறு உலகத்தில் இருந்தனர்.
அடுத்த பகுதியில் இருந்த ஒருவரின் மடிகணினியில் படம் ஓட,சந்தானத்தின் குரல் ஒலித்தது.
"ஒவ்வொருத்தருக்கு ஒரு feeling மச்சி"
.......................................