என் மகன் வரப்போகிறான்.

ஏக்க மூட்டைகளின் மத்தியில்
எதிர்பார்ப்பு விழிக்கற்றைகள்
என் வீடு முழுவதும்.!
நானும் என் ஆசை நறுக்கல்களோடு.!
என் மகன் வரப்போகிறான்.!!!

வெளி நாட்டின் மாற்று முகத்தோடோ,
கலாச்சார பூச்சோடோ,
புரியாத உதடுகளோடோ
அவன் வரவில்லை.
உள் நாட்டின் ஓரத்தில் இருந்து
என் மகன் வரப்போகிறான்.

ஆத்தா மடி சாய்ந்து
சோற்று உருண்டை மென்று,
தங்கையின் கனவுகளோடு
தன்னுடையதையும் கலந்திட
என் மகன் வரப்போகிறான்.

என்னோடு பேசிட, அடித்திட,
சிராய்ப்பில் சதை சிதறிட,
வண்டி வேகத்தில் போட்டியிட,
மழையில் குடும்பம் நனைந்திட
செலவில் என் மனைவி கருகிட
என் மகன் வரப்போகிறான்.

படுக்கையில் நழுவும் உடையை
உறக்கத்தில் சரியாக்கி,
பக்கத்து காலியிடம் துழாவி
கைகளில் அண்ணனைத் தேடி
காத்திருக்கிறாள் என் மகள்.
என் மகன் வரப்போகிறான்.

அலுவல் வேலை குறித்த
கனவு கசிவுகளோடு நானும்.
கனவுகளில் வெளவால் அடிவாங்கி
கதறலோடு என் மார்புக்குகையில்
என் மனைவி்யும்.
என் மகன் வரப்போகிறான்.

மனைவி எழுப்பினாள்
……வந்துள்ளான் என்று!!

விழித்தேன்.
எவனோ என் படுக்கையோரம்……

எவளோடும் வரவில்லை அவன்.
தள்ளாடியும் நிற்கவில்லை.
அன்றியும் ஆயிரங்கோடி
கடப்பாரைகளை என்னுள்குத்தி.
வழியும் குருதி நக்கி நின்றான்
வந்தவன்-
குத்தீட்டியாய் மொசைக் வண்ண
முடிக்கற்றைகளோடு
‘ஹாய் டாட்’.என்றான்.!!

காத்திருக்கிறேன்
என் மகன் வரப்போகிறான்.

எழுதியவர் : புய்ஹுவை காயத்திரி (26-Apr-12, 9:06 am)
சேர்த்தது : puthuvai gayathiri (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 286

மேலே