வெண்மணி கிராம கொடூரம்

இந்த உழைப்பாளர் தினம் அன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கொடூரம் இது. நம் சக மனிதர்களுக்கு நேர்ந்த வன்மையை தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் வெண்மணி. அது இரிஞ்சூருக்கு அருகில் இருக்கிறது. அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு இருந்தார்.

அங்கு வாழும் தாழ்த்தப்பட்டோரை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நாயுடு தன் ஆட்களை ஏவிவிட்டார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் பயப்படவில்லை. ஊரையே கொளுத்திவிடுவேன் என்று கொக்கரித்தார் நாயுடு. இது அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வருக்குக் கடிதம் (12.12.1968) அனுப்பினார்.

அதில் -

‘கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உள்ள நெல்உற்பத்தியாளர் சங்கம் வெண்மணியை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும்,வெண்மணி எரிக்கப்படாமலிருக்கவும் முதலமைச்சராகிய நீங்கள் உடன் தலையிட்டுக் கோரச் சம்பவம் எதுவும் நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

முதலமைச்சரும் காவல்துறையும் அதை அலட்சியம் செய்தனர். விளைவு….

யாரும் எதிர்ப்பார்க்காத – தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்பார்த்த – அந்தக் கோரச் சம்பவம் நடந்தே விட்டது!

டிசம்பர் 25 மாலை 6 மணி அளவில் திடீரென சில ரவுடிகள் வந்தனர். அங்கு டீக்கடை நடத்திக்கொண்டிருந்த முத்துச்சாமியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். சாலைத் தெருவில் உள்ள ஒரு சாதி இந்துவின் வீட்டில் போட்டுப் பூட்டிவிட்டார்கள்.

செய்தி அறிந்த வெண்மணி கிராமத்துத் தொழிலாளர்கள் அந்த வீட்டின் முன் கூடிவிட்டார்கள். முத்துச்சாமியை வெளியே அனுப்பு என்று கத்தினர். வீடு தாக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துச்சாமியைக் கொல்லைப்புறமாக அனுப்பி விட்டார்கள்.

முத்துச்சாமி மீட்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ண நாயுடு ஆத்திரப்பட்டார். தானே தெருவில் இறங்கி ஆட்களைத் திரட்டினார். பல மிராசுதார்களும் இதில் சேர்ந்தனர்.

கைகளில் பெட்ரோல் டின்கள், துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு சுமார் 200 பேர் இரவு 8 மணியளவில் வெண்மணி கிராமத்திற்குள் வந்தனர்.

அங்கு இருந்த அனைவரையும் சுடு! கொளுத்து! வெட்டு!அடி!உதை என்று பெருங்கூச்சல் போட்டுக்கொண்டே தெரு முழுவதற்கும் தீ வைத்தார்கள் பாவிகள்! கண்மூடித்தனமாகத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஜெனரல் டயர் அமிர்தசரசில் நடத்திய கொலைவெறித்தனமான துப்பாக்கிச்சூட்டிற்குச் சளைத்ததல்ல இது. அந்தத் தெருவில் இருந்த 28 வீடுகளும் பற்றி எரிந்தன. எனினும் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்து நின்று போராடினார்கள். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள முடியாமலும் – மேலே பாய்ந்துவிட்ட குண்டுகளோடும் – வயல் வரப்புகளுக்குள் வீழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் நான்கு அல்லது ஐந்து குண்டுகள் வரை பாய்ந்திருந்தன. அப்படி வீழ்ந்தவர்கள் 13 பேருக்கு மேலிருக்கும்.

தெருவில் தெற்குக் கடைசி வீடு – 36க்கு 12 என்று நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீடு. கிழக்கு பக்கம் வாசல். அந்த வீட்டிற்குள் 12க்கும் 12 அடி அளவு கொண்ட ஓர் அறையில்தான் 44 பேர் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு கண்டு சிதறி ஓடியவர்களில் பெண்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாய் இருந்தவர்கள்தாம் தெருக்கோடியில் இருந்த அந்த வீட்டிற்குள் இருந்தால் தப்பிவிடலாம் எனும் ஒரு நம்பிக்கையில் முடங்கிக் கொண்டிருந்தார்கள்.

குடிசைகளைக் கொளுத்தியும் வெறி அடங்காதவர்கள் பெண்டு பிள்ளைகளைத் தேடினார்கள். எரியாத அந்த வீடு அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டது. அதற்குள் பலர் ஒளிந்திருப்பதும் தெரிந்துவிட்டது.

உற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள். ஒரே நேரத்தில் மூண்டெழுந்தது பெரு நெருப்பு!

எரியும் குடிசைக்குள்ளிருந்து ஏதோ வந்து விழுகிறது! ஒரு குழந்தை! தான் செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில் வீசினார்கள்!

எரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!

இறந்தவர்களில் 20 பேர் பெண்கள்! அவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள்!

இறந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள்! 13 வயதிற்கும் குறைவானவர்கள்!

இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள்! அவர்களில் ஒருவர் 70 வயது பெரியவர்!

வெண்மணி கோரம் தொடர்பாகப் போலீசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. பக்கிரி எனும் ஒரு ரவுடி இறந்ததற்காக கோபால் உள்ளிட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள் மீது ஒரு வழக்கு. 44 விவசாயத் தொழிலாளர்களைத் தீ வைத்துக் கொன்ற குற்றத்திற்காகக் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட சிலர் மீது இன்னொரு வழக்கு.

தீர்ப்பு என்ன தெரியுமா?

முதல் வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை!

இன்னொருத்தருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை! மற்றும் 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைவாசம்!

இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவரைச் சார்ந்த 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை!

44 பேரை உயிரோடு சுட்டெரித்த மாபாதகர்களுக்கு ஆயுள் தண்டனை கூட இல்லை.

இதைவிட ஒரு வினோதம் உண்டு. இந்த கீழ்க்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல் வழக்கில் தண்டனை பெற்ற 8 விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதற்கும் ஒரு உச்சம் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் மிராசுதார்கள் 8 பேரும் உயர்நீதிமன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். 44 பேரை துடிக்க துடிக்கக் கொன்ற கொலைகாரக் கூட்டத்திற்கு எந்தத் தண்டனையும் இல்லை.

இதற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த காரணத்தையும் கேளுங்கள்.

‘இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள 23 பேருமே மிராசுதார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள். மிகப்பெரிய நிலச் சொந்தக்காரர்கள். அவர்கள் கவுரவமிக்க சமூக அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழிதீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குத் தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்குக் கடினமாக உள்ளது’

ஆக, குற்றவாளியா? நியாயவானா? என்பதைத் தீர்மானிக்க சாட்சிகள் தேவையில்லை. விசாரணைகள் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும். அவர்கள் கொலைகாரர்கள் இல்லை. இப்படியும் ஒரு தீர்ப்பு.

இந்த வரலாற்றுக் களங்கம்…

நியாய உள்ளம் படைத்தோரையெல்லாம் பதற வைத்த இந்தக் கொடூரம்…

இணையதளத்தில் படித்து
தலைகுனியும்
தமிழ்தாசன்

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (1-May-12, 12:08 pm)
பார்வை : 593

மேலே