பெரிய வீட்டு ரகசியம்

"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
மரம் மண்ணின் உயிர்
மரம் ஒரு வரம்"
இவ்வாறு பல நூறு வாசகங்கள் தாங்கிய பேரணியின் தலைவன் தனஞ்செயன்.

அன்றும் வழக்கம் போல் விழிப்புணர்வு பேரணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.உடலின் ரத்தம் வியர்வையாக வெளியேறுகிறதோ என்று சந்தேகிக்கும் அளவு கடும் வெயில்.

"கொஞ்சம் அந்த காத்தாடிய போடுமா.." என்று சொல்லிக் கொண்டே வீட்டில் நுழைகிறார்.

"என்னங்க..பயங்கர வெயில் போல?இப்படி தொப்பு தொப்பா வியர்த்திருக்கு?"?காபி , டீ எதாவது குடிக்குறேகளா?",வாஞ்சையுடன் கேட்டாள் மனைவி வடிவு.

"இல்ல வடிவு.உனக்கு எத்தன தடவ சொல்றது?காபி , டீ எல்லாம் இனி குடிக்க போறதில்லை.ஒரே அருகம்புல்ச் சாறு தான்னு"

"சரி சரி கோவிக்காதிங்க.கொண்டு வரேன்"

"நாங்கெல்லாம் இயற்கையோட ரசிகர்கள்.இனியாவது மறக்காதே",கையில் சாற்றுக் கப்புடன் வீடு வாசற்படியில் அமர்ந்தார்.

வீடு வாசலில் நிறைய மரங்கள், செடி கொடிகள் எல்லாம் வளர்ந்திருந்தன.மா, பலா, வாழை, கத்தரி, தக்காளி, ரோஜா, மல்லிகை, என்று நறுமணம் நிறைந்திருந்தது.இந்த வகைத் தோட்டத்திற்க்காக வீட்டுக்கு முன் கொஞ்சம் இடம் விட்டுக் கட்டியதை அன்றைய பேரணியில் பலரும் வெகுவாகப் பாராட்டியதை நினைத்து ஒரு வெற்றிப் புன்னகை வெளிவந்தது.

அப்போது தான் கண்டார், அந்த ரோஜாச் செடிக்கு அருகில் ஒரு வேம்புச் செடி தளிர்க்க ஆரம்பித்திருந்தது.
என்ன தான் வேம்பு பல மருத்துவ குணங்கள் கொண்டிருந்தாலும் அதன் வேர் நீண்டு பரவும்.எதிர்காலத்தில் அது அந்த கட்டிடத்திற்கு ஆபத்தாகக் கூட அமையும்.யோசித்துப் பார்த்தார்.30 லட்ச ரூபாய் சொத்து வீண் போவதை அவர் எப்படி பார்த்துக் கொண்டிருப்பார்?வேரோடு பிடுங்கி ஓரமாய் எரிந்து விட்டார் அச்செடியை.

எதிர் வீட்டுச் சுவரில் அடுத்த நாள் பேரணிக்கான சுவரொட்டி: "மரங்களின் காவலன் திரு.தனஞ்செயன் அவர்கள் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைப்பார்"

பெரிய வீடு விவகாரங்கள் பாவம் அந்த சுவரொட்டி அடித்தவனுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே?

(மனிதன் இன்னும் மாறவே இல்லை.பயனிருந்தால் ஆதரிப்பதும், தேவதூதன் போல் அதைக் காப்பதும், பயனில்லை எனும் போது யாரும் அறியாமல் அழித்து விடுவதும் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த தனஞ்செயன் யாரோ ஒருவனில்லை.நம் அனைவருக்குள்ளும் இப்படி ஒரு மனிதன் இருக்கத் தான் செய்கிறான்.)

எழுதியவர் : RajeeSankar (25-May-12, 5:21 pm)
பார்வை : 909

மேலே