நீ அற்ற பாதையில்...
நீ
ஒரு தென்றலாகத்தான் இருந்தாய்...
யாரும் உணரும் வகையில்.
நான்தான்...
ஒரு குருடனாய்...
கைகளைத் துழாவித் தேடுகிறேன் ...
உனது திசையை.
நீ
ஒரு தீபமாகத்தான் இருந்தாய்...
யாருக்கும் வெளிச்சம் காட்டியபடி.
நான்தான்...
கண்களை மூடி...
கனவுகளில் இறந்துவிடுகிறேன்
யாரும் அறியாதபடி.
நீ
ஒரு எளிய இசையாக இருந்தாய்..
யாரும் இரசிக்கும்படி.
நான்தான்...
நகரத்துச் சப்தங்களால்
நசுக்கிவிடுகிறேன்...
உனது ஸ்வரங்களை.
நீ
எளிமையாகத்தான் இருக்கிறாய்...
இப்போதும்.
நான்தான்...
அறிவின் இடர்களால்...
என்னைத் தொலைத்துவிட்டு...
உன்னைத்தேடுகிறேன்...
நீ அற்ற பாதையில்.