சிந்தைத் தமிழ்
 
 
            	    
                சிந்தைத் தமிழ் மனிதராய்ப் பிறந்தோம் மண்ணிதிலே ! 
மறந்திட வேண்டும் பகைமையினை ! 
புனிதராய் ஆவது புன்னகையால் ! 
பொசுங்கிட வேண்டும் தீமையெலாம் ! 
இனிமை என்பது தமிழிசையாம் ! 
இனிவர வேண்டும் இயல் இசைகள் ! 
தனிமை என்பது நாடகமே ! 
தாயாம் தமிழும் நம் அருகில் ! 
அருகில் வந்தது அறிவென்றால்
 ஆற்றிடலாம் பல செயல்களையே ! 
அருகில் உள்ள மருத்துவமும் 
அவையும் எங்கள் கைகளிலே ! 
பெருவில் இராமக் காதைகளும்
பெற்றது தமிழின் பெருஞ்சிறப்பு ! 
தருவில் துளைக்கும் மரங்குத்தி (அதுபோல்) 
மனதில் தைக்கும் தமிழ்ச்சத்தி ! 
தமிழின் சத்தி மிகப்பெரிது !
 தரணியும் அதனை தெரிந்திடவே 
குமிழாய் வந்திடும் காவிரியாய் 
கொடுத்திடுவோம் நற் கவிகளையே ! 
அமிழும் தேனில் அத்தேனீ போல் 
ஆழ்ந்திட வேண்டும் (தமிழ்)அமிழ்தத்தில் !
 உமிழும் வேதச்சாகைகள் போல்
 தமிழில் உண்டு பல சுவைகள் !
சுவையை அறியும் நா போல 
சுற்றிட வேண்டும் மனம் தமிழில் ! 
அவையை அறிந்து பேசு என்றே
 அறிவை உணர்த்தும் பல நூல்கள் ! 
எவைதான் இல்லை நம் மொழியில் !
 எதற்கு அச்சம் நம் மனதில் ? 
குவையாய் உண்டு தமிழ்ப்பண்கள் ! 
கொட்டிட வேண்டும் சந்தங்களை ! 
	
சந்தங்கள், பாக்கள் பல கொட்டி 
செய்திட செய்வது நங்கடமை ! 
விந்தையாய் செய்திகள் பல சொல்லி 
வளர்த்திடுவோம் நம் மக்களையே ! 
சிந்தையில் தமிழை ஏற்றிடவே 
சொல்லிடவேண்டும் கவிதைகளை ! 
எந்தையும் தாயும் என் தமிழே ! 
ஏற்றிட வேண்டும் இவ்வெண்ணம் !
 
                     
	    
                

 
                                