[283 ] சூதாட்டச் சன நாயகம்!
மெய்க்காதல் எனச் சொல்லி
மேனியெலாம் சிலிர்ப்பிப்பார்!
கைக்குழந்தை தந்துவிட்டுக்
காற்றாக மறைந்திடுவார்!
எல்லோர்க்கும் கல்வி
இலவசந்தான் என்றிடுவார்!
இடத்திற்குப் பணங்கேட்டு
இருப்பதெலாம் பிடிங்கிடுவார்!
காந்தியாட்சி வருமென்பார்!
காந்திக்கும் சிலைவைப்பார்!
கடையதற்கு முன்திறப்பார்!
கள்,மதுவை விற்றிடுவார்!
காந்திவைத்து நோட்டடிப்பார்!
கள்ளநோட்டை அதில்கலப்பார்!
சாந்திக்குக் கொடிபிடிப்பார்!
சாக்கடையில் பிணம்நிறைப்பார் !
எல்லோரும் இந்தியரே
என்றேழுதிப் பாடிடுவார்!
பொல்லாதோர் ஆகிடுவார்
பொட்டுத்தண்ணி மறுத்திடுவார்!
வெளிநாட்டு முதல்என்பார் !
விரைந்துவேலை கிட்டுமென்பார்!
வழிகாட்டிப் பெற்றபணம்
வைத்திடுவார் அயல்நாட்டில்!
அன்பே சிவமென்பார்!
அறைக்குள்ளே யோகமென்பார்!
துன்பம் குறைப்பதற்குத்
துப்பட்டா உருவிடுவார்!
பொய்வாக்கு வீசிடுவார்!
புதுக்கனவு விற்றிடுவார்!
கைவாக்கைப் போட்டிடுவோம்!
கனவுக்கே காத்திருப்போம்!
வாழ்க்கை ஒருபோராட்டம்!
வைத்திழக்கும் சூதாட்டம்!
சீழ்கையோலி வான்முட்டும்!
சிந்தும்நீர் கண்முட்டும்!
கேட்க,ஜன நாயகந்தான்!
கிடைத்ததுவோ நாயகந்தான்!
-௦-