வழிப்போக்கனின் குறிப்புகள்
கூடு திரும்பிய பறவைகளுக்காக
நாளை ஒரு வானம்
காத்திருக்கும்.
தெளிந்த சலனமற்ற நீரோடையில்
கற்களை வீசி அலைகளை
உருவாக்குபவனின் மனதில்
ரசனையா? வன்மமா?
கானகத்தின் கற்களில்
கண்டெடுத்த குருதியின் வாசம்
மனிதனுடையது.
காக்கைகள் கல்லெறிய
கற்றுக்கொண்டனவா?
புத்தனின் கால்தடத்தை
எந்த காற்று வந்து
அள்ளிக் கொண்டு சென்றிருக்கும்?
அந்தி வானில்
எரிமலையின் கீற்றை மிச்சம்வைத்து
கடலில் அமிழ்கிறது பூப்பந்து
பாலை நிலத்தில்
சின்ன மேடமைத்து அதன்
உள்புகுகிறேன்
கூடாரத்தை பற்றவைக்கட்டும் நிலா