கவிதை தேடி ஒரு பயணம் (பகுதி-1 )

ஒரு நல்ல கவிதை எழுத வேண்டும்,
ஜோல்னா பையோடு,
அரைமூடி மை நிரப்பிய பேனாவோடு
காட்டினூடே,
காற்றோடு நடந்தேன்.

காற்று,
கல்,
கரையான் புத்து,
அருவி,
பாம்புரித்த தோல்,
எல்லாமே கவிதைகள் சொல்கிறது.

புதியதாய் பல விசயங்கள் புலப்பட்டது.

மயில்கள் தோகை விரிப்பதில்
மட்டுமல்ல
தவளைகள் குதிப்பதிலும்,
பரதமிருக்கிறது.

குயிலின் இசையில் மட்டுமல்ல
சின்ன வண்டுகளும்,
ஜன்ய ராகமிசைக்கிறது.

மாமல்லபுரத்து சிற்பங்களில் மட்டுமல்ல
சிட்டு குருவியின் சின்னக் கூட்டிலும்,
சிற்பமயம் சிறகடிக்கிறது.

நிலவின் ஒளியில் மட்டுமல்ல,
மின்மினிகளின் ஒளியிலேயே
என் பாதை நீளுகிறது.

நீளும் பாதை ஒரு நீர்வீழ்ச்சியில் முடிந்தது.
நிலவு கசிய,
தென்றல் சில்லிட,
ரோமக்கற்றை சிலிர்த்தாட,
மேலாடை பெரும் பாரமாய் தோன்றியது.

ஆதிவசியாய்
அருவியில் விழுந்தேன்.
துளித்துளியாய்
என் ஜீவன் கரைந்தது.

வைரம் அறுக்க வைரம் வேண்டுமா?
என் மென்தோள் பட்டே
சுக்குநூறாகிறதே வைரத் துளிகள்.

நிலவொளியில் மின்னும்,
ஒவ்வொரு துளிக்குள்ளும்
சிறைபட்டு கிடக்கும் மின்மினிகள்.

என் மேல் பட்டதன் அடிமைவிலங்குகள் உடைகையில் மகாத்மாவாய் சுவாசிக்கிறேன்.

பெரியத்தாடியில் சிறு சிறு மின்னும் வெள்ளைநரைகள்
நீ என்ன ஆணா?

ஒரத்து மரக்கிளை தினமுன் கூந்தல் வகிடெடுக்க
நீ என்ன பெண்ணா?

சிந்தித்திருக்கும் போதே,
அருவியின் கரங்கள்,
என் கீழாடை பறித்தது.

அருவியின் நீர்க்கற்றை நாணத்தில் நெளிந்து
வீழ்ந்தது.

நீ ஒரு பெண்ணென
சொல்லாமல் சொன்னது.

நீர்வீழ்ச்சியே!
வீழ்கிற விசயத்தை இந்த மதிகெட்ட தேசம் பெண்மைக்குத்தானே பொருத்தும்.
அது இங்கே பொருந்துகிறதா?.

ஆடையில்லாதவன் அரைமனிதனென்று யார் சொன்னார்?
அடையில்லாதவனுக்குத்தான் இயற்கையின் முழுமுகம் பரிட்சயம்.

காதலி பார்க்கையில்
பரவசத்தில் தொண்டைக்குள்
சுரக்கும் இனம்புரியாத உமிழ் நீர்போல,
யார் பார்க்க சுரக்கிறது
பூமியெங்கும் இந்த அமுத சுரபிகள்?

இது பூமியெங்கும்
பொங்கியெழும் இயற்கையின் ஹார்மோனா?.

அரை மூடி மை நிரம்பிய பேனாவை
முழுதாய் நிரப்பிவிட்டது அருவி.

நதி கொடுத்த கவிதைக்கு நன்றி சொல்லி,
மீண்டும் பயணம் தொடங்கியது.
-பயணம் தொடரும்
-அதில் கவிதைகள் படரும்.

எழுதியவர் : துளசி வேந்தன் (2-Aug-12, 11:01 am)
பார்வை : 185

மேலே