மீன் குஞ்சு !

உதற கால் இல்லாதமையால்
உரக்க விசும்பிற்று
புதிதாய் கருவிறக்கம்
செய்யப்பட்ட மீன் குஞ்சு !
உலகம் இதுதான்
என்றேடுத்துரைக்கும் முன்னரே
ஊர் சுற்ற
எத்தனித்தது இளவல் !
பிடிக்க போன தாயிடம்
வழுக்கி போனது திமிராய் !
தலைவிரி கோலமாய்
நின்ற மனைவியை
நெஞ்சில் நிறுத்தி
வலை வீசினான் மானுடனோருவன்,
அஞ்சி ஓடிய மீன்களின்
எஞ்சியது இளசும் !
பதறித்துடித்த அம்மாவிடம்
அலறித்துடித்தது குஞ்சு,
உன் கர்ப்பப் பையின்
கதவு திற
எவனோ ஒருவனின்
இரைப்பையில்
வீழ்ந்து சாவதை விட,
உன் இறைப்பையில்.......!
தண்ணீரில்
கரைய மனமின்றி
தவித்தது
அப்பிஞ்சின் கண்ணீர் !
வறுபட்ட மீன்களின்
வருத்தப்பட்ட இதயங்கள்
வரையப் படுவதில்லை
கடவுளின் ஓய்வறையில் !
- வினோதன்