பாவம்! என்ன செய்யும் மழை?
மழை பெய்ய ....
மறுக்கும் நகரத்தில்
வசித்தேன் நான்.
எரிக்கும் வெயில்
என்னைத் தீய்த்ததுடன்...
உறிஞ்சிக் கொண்டிருந்தது
என் உடல் நீரையும்
வியர்வையாய்.
கருத்துத் தகிக்கும்
இரவொன்றின்
புழுக்கம் தாளாமல்...
"செம்புலப் பெயல் நீர் போல்...
அன்புடை நெஞ்சம்"தானே எனக்கு?
என் நிலம் வந்து சேர....
கேடென்ன உனக்கு?-என்றேன்
மழையிடம் கவிதையாய்.
அன்புடை நெஞ்சம் பற்றி...
மனிதர்கள் பேச வேண்டாம் ....
என்றது மழை
மகா கோபத்துடன்.
நீ திருடிய...
ஊருணி., குளம், குட்டை...
வயல்..வரப்பு...வாய்க்கால்...
சாலை ஓர மரம்...காடு....
வைக்க மறந்த துளசி...
கிணறு...வீட்டுத் திண்ணைகள்...
எல்லாம் மீண்டும் கொண்டு வா..
இந்தப் பூமியில்.
கடல் நீர் மட்டுமே...
குடித்துக் குடித்து....
என் மேகங்களும்
கரித்து விட்டன......
என்ற மழை....
மழை பற்றிப் பிறகு பேசலாம்...
என்ற படி...
என் கண்களிலிருந்து
தத்தித் தத்தி
என் காலடியில் விழுந்து...
காணாமல்...
போயேபோய் விட்டது.