அதனால்.....மனிதன்.

"பெண்" என்று சொன்னால் போதும்;
என் மனம் "உடும்பாய்" மாறும்.
அவளோடு ஒட்டிக் கொள்ளும்.

"பணம்" என்று சொன்னால் போதும்;
என் மனம் "நரி"யாய் மாறும்.
வஞ்சனை வலை விரித்து
எதிரி விழக் காத்திருக்கும்.

"கோழை"யாய் ஒருவன் வந்தால்
என் மனம் "சிறுத்தை"யாகும்.
"சிங்கம்" போல் சிலிர்த்து நிற்கும்.
எதிர்ப்பவன் வலிமை கண்டால்...
எண் சாணும் "பூனை"யாகும்.
எதிரியை நக்கித் தள்ளும்.

"நன்மைகள்" எனக்கு என்றால்..
எண் மனம் "வௌவாலாய்" மாறும்.
தலைகீழாய்த் தவித்துப் பறந்து
ஆசையை அள்ளித் தின்னும்.
அதில் எதிரிக்கும் கொஞ்சம் என்றால்..
"எருமையாய்" மாறும்...என் மனம்
எண்ணரும் இடைஞ்சல் செய்யும்.

இத்தனை "மிருகங்கள் "
எனக்குள் வசிக்கும்.

என்றாலும்-
எனக்குக்
கை இரண்டு;
கால் இரண்டு;
கொஞ்சம் உடையும் உண்டு;

அதனால்-
நான்

மனிதன்.

எழுதியவர் : rameshalam (10-Aug-12, 5:13 pm)
பார்வை : 158

மேலே